பக்கம்:கனிச்சாறு 8.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95


முடிவுரை:

இதுவரை இளஞ்சேர னார்இறைக் குருவனார்
புதுமுறை யால், தொல் காப்பியப் புலவனார்
மூவரும் திரு. வி. க. வெனும் முனிவனை
யாவரும் வியக்க மொழியா சிரியனாக்
காட்டி நின்றதும்,
                                                கவின்மிகு புலவர்
பாட்டியல் வல்லவர் பாலசுந் தரனார்
பன்னீர்ச் செல்வனார் ஞானச் செல்வனார்
அன்னவர், மக்கள் அருந்தலை வரேயென
நாட்டி நின்றதும்,
                                                நாமவர் பாக்களில்
ஓட்டிய உள்ளம் ஓரடி பெயராமல்
கேட்டு நின்றதும் கிளுகிளுப் புற்றதும்
வாட்டிய கோடைக்கு வந்த மழையால்
உயிர் தழைப் பெய்திய உயர்ந்த நிகழ்ச்சி!

மொழித்தொண் டென்று முழக்கிய முன்னணி
வழித் தொடர் புற்ற கருத்துகள் வருமாறு:

இளஞ்சேரர் அணியோ எந்தமிழ்த் தென்றல்
திரு.வி.க.எனும்பெயர் ஏற்ற தாலே
தமிழ்த்தொண் டாற்றி, தகுபடிமம் பெற்றார்!
என்று கொள்கை எடுத்துக் கூறும்!

பொதுத்தொண் டென்று பொருதிய மாற்றணி
புதுக்கிய கருத்துகள் புலப்படும் வகையிது:

இளவழ கர்தம் அணியோ அண்ணல்
திரு.வி.க. நம் தீந்தமிழ் மொழியைக்
கருவியாக் கொண்டன ரேனும் ஆங்கவர்
பொதுநலத் தொண்டே பொலிவுற் யுயர்ந்த(து)
இதுமெய் என்றே எடுத்து மொழியும்!

பட்டி மன்றம் பயனுறக் காட்டிய
நெட்டமை கருத்துக்கு நேரிய தலைவராய்
இருந்த தலைவர் திரு.வி.க. எனும்
அருந்தமிழ் ஆசான்! அவர்தம் வாழ்க்கையோ
தமிழ்முனி வாழ்க்கை! தவறிலா வாழ்க்கை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/109&oldid=1448124" இலிருந்து மீள்விக்கப்பட்டது