பக்கம்:கனிச்சாறு 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

அன்னவர் வாழ்க்கையால் தமிழ்அழ குற்றது!
நன்னரும் மேடைப் பேச்சு நயந்தது!

இனிய உரைநடை! எழில்தவழ் நறுந்தமிழ்!
கனியும் அன்பினால் கனிந்தசொற் பொழிவு!
மக்களை எழுப்பி மனத்தைத் திறந்தது!
தக்க கருத்தினால் தாளிகைத் தொண்டு
மிக்கசிறந்தது! தமிழ்நலம் மீண்டது
துயருற் றிருந்த தொழிலா ளர்கள்
மயலற நீங்கி மாண்புறப் பெற்றனர்!
பொதுமைக் கழகம் பொலம்பொலம் தோன்றி,
புதுமைக் கருத்துகள் விளைத்துப் பொலிந்தன.

இந்திய நாட்டில் இதுவரை இல்லா
முந்துதொழிற் கழகம் முதன்முதற் கண்டார்!
தொழிலாளர் இயக்கம் தோன்றிய பின்னை
வழியிலா வாழ்க்கை வழிகண் டுய்ந்தனர்!
சாதிக ளற்ற சமயப் பொதுமையால்
மோதல் குறைந்து முழுவலி திரண்டது.

பற்பல நூற்கள் பாவிலும் உரையிலும்
நூற்புல வோர்பலர் நயக்க எழுதிப்
பொய்மைக் கருத்துகள் புதைவுறச் செய்து
மெய்ம்மை நாட்டிய மேலவ ராயினர்.

சமயத் தொண்டினும் நாட்டுத் தொண்டினும்
அமைவுற் றிலங்கிய அருந்தமிழ்த் தொண்டினும்
புதுமைத் திருத்தம் புகுத்திய வகையினும்
பொதுமை அரசியல் புகன்ற நெறியினும்
தொழிற்பே ரியக்கம் தொடங்கிய திறத்தினும்
எழிலுறத் தாளிகை இயற்றிய முறையினும்
திரு.வி.க. .வெனும் திருத்தகு முனிவோன்
பெருவிறல் மறவனாய்க் பிழையா தொழுகினான்!

அன்ன முனிவோன் ஆற்றிய தொண்டினில்
என்னென்ன சிறந்தவை; என்னென்ன குறைந்தவை.
என்றெடுத் தியம்பல் இயலாது எவர்க்கும்!
இயம்பற் பிழையால் எடுத்த கருத்து
மயங்கல் அடைவதும் மங்கல் அடைவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/110&oldid=1448133" இலிருந்து மீள்விக்கப்பட்டது