பக்கம்:கனிச்சாறு 8.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  99


9. அரசுயர் பள்ளி, உரத்தநாடு

(தி.பி. 2006 விடை 17 (31.5.75) அன்று உரத்தநாடு அரசுயர்பள்ளியில்
நிகழ்ந்த பாரட்டரங்கத் தலைமையுரை)


முன்னுரை:

பேரன்பு கொண்டவரே! பெரியோரே!
தாய்மாரே! பெருமை மிக்க
காரம்பு மழைபொழியும் கழனிமிகு
எழிலுரந்தைக் கவின்மிக் கோரே!
நீரம்பொன் நெல்விளைத்துச் சோறுதரும்
நெடும்புகழ்சேர் தஞ்சை யோரே!
வீரம்பொய் யாத்தடந்தோள் இளைஞர்களே!
விறல்தமிழால் வணங்கு வேனே!

பாவேந்தன் பெருவிழாவாம்! இவ்விழாவில்
பாவலர்யாம் பாட வந்தோம்!
பாவேந்தன் பாட்டிலவன்; மறல்வேந்தன்
புரட்சியிலே! மலர்மி குந்த
காவேந்துங் கருங்குயில்போல் தமிழகத்தின்
கரையணைந்த புதுவை தன்னில்
சாவேந்தும் வரையினிலே செந்தமிழைச்
சலிப்பின்றிப் பாடி னானே!

இக்காலும் தமிழ்ப்பாடும் புலவருளார்:
இரந்துசோ றுண்ண வேண்டித்
திக்காலுக் கோரிருசொல் பழந்தமிழில்
திருடியொரு பாட்டைச் செய்து
முக்காலும் என்பாட்டே நம்புங்கள்
எனப்பொய்யால் முக்கா டிட்டுப்
பொக்காயும் பதராயும் தமிழ்வளர்ப்பார்;
போலிலனே புதுவை வேந்தன்!

(வேறு)


தக்கதமிழ்ச் செழுந்தீம்பா! நற்றமிழ்ப்பா!
தனிச்சுவைப்பா! தண்டமிழ்ப்பா! தப்பாதப்பா!
எக்காலுந் தமிழரிடை இருந்தமிழ்ப்பா!
இணையிற்பா! எழில்சேர்பா! இலக்கணப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/113&oldid=1448448" இலிருந்து மீள்விக்கப்பட்டது