பக்கம்:கனிச்சாறு 8.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


துடிக்கின்ற நெஞ்சத்தை அங்கொருவன் பார்ப்பான்;
தோன்றுமவன் மூளையிலே புதுக்கருத்தாம் ஒன்று!
வடிக்கின்ற மறைவிடத்தைத் தேடிமது விற்பான்!
வந்துவிழும் அண்ணன்மார் தம்பிமார் கூட்டம்!
படிக்கின்றோம், சொல்கின்றோம்; பழக்கம்விட்டுப் போமா?
பழக்கத்திற் கிடம்விட்டால் முழுக்கஅது கேட்கும்!
நடிக்கின்றோம் திரைப்படத்தில் குடித்ததுபோல்! தம்பி,
நாள்தோறும் பார்க்கின்றான் ஒருநாளில் செய்வான்!

எனவேதான் நம்மக்கள் மனந்திருந்த வேண்டும்!
என்பதற்குச் செயற்பாட்டு மாநாடு போட்டார்!
தினவிருக்கும் மனத்தினிலே; ஆனாலும் அறிவால்
தேர்ந்துவிட்ட நல்லவற்றை நினைத்திருக்க வேண்டும்!
இனமிருக்கும் இருப்பினிலே செயலிழந்து போனால்
என்றென்றும் அடிமையராய் ஏழையராய்ப் போவோம்!
மனமிருக்கும் பெரியோரே! மதியிருக்கும் போதில்
மதுவெதற்கு? இழிவெதற்கு? மானம்விடல் எதற்கு?

குடித்தவனைப் பாருங்கள்; குடிக்கத்தோன் றாது!
குடித்தவனைப் பெற்றெடுத்த தாயும்மனம் வெறுப்பாள்!
குடித்தவனை மனைவியுமே உளம்விரும்ப மாட்டாள்;
குடித்தவனை அப்பன்என மகன்கூற விரும்பான்!
குடித்தவனுக் குறவு - எனச் சுற்றத்தார் சொல்லார்!
குடித்தவனை ஊர்வெறுக்கும்; உலகமெலாம் தூற்றும்!
குடித்தவனுக் கவனையன்றி யாருந்துணை யில்லை;
குடிக்கையிலே மதுத்துணை;பின் அதற்கவன்தான் துணையே!

மதுக்குடிப்பால் ஒருவனது மானமெல்லாம் போகும்;
மதுக்குடிப்பால் குலப்பெருமை மண்ணாகிப் போகும்;
மதுக்குடிப்பால் கல்விநலம் சீர்கெட்டுப் போகும்;
மதுக்குடிப்பால் அறிவுணர்வும் அழிந்துமடந் தோன்றும்!
மதுக்குடிப்பால் பொருளழியும்! உடல்நலமும் தாழும்!
மற்றுநம்மின் முயற்சியெல்லாம் வாழ்க்கையெலாம் சாகும்!
மதுக் குடிப்பு மதிகுடிக்கும்! உயிர்குடிக்கும்! மற்றும்
மாண்டபின்னும் குடும்பத்தின் பெயர்குடிக்கும் அன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/124&oldid=1448467" இலிருந்து மீள்விக்கப்பட்டது