பக்கம்:கனிச்சாறு 8.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


(பொன்னி வளவனின் ‘கல்விப்’ பாட்டு)


இனி,
அறிவழியும் மதுக்குடிப்பால் என்று சொல்வார்;
அ. அரங்க சாமியென்னும் புலவர் இங்கே!
பொறிவழியே அறிவியங்கும் உளமி யங்கும்;
பொன்னான வாழ்வியங்கும் உணர்வோம் நாமே!
நெறிவழியே போவதற்கு விரும்பு கின்றோம்;
நேர்வழியில் போகாமல் குறுக்கே போவோம்!
குறிவழியில் போவதெனின் குடிக்கா தீர்கள்!
குடும்பவழிச் செலமாட்டீர், கெட்டுப் போவீர்!

(அரங்சாமியின் ‘அறிவுப்’ பாட்டு)


அடுத்து,
பண்டரி நாத னென்னும்
பாவலர் இனிமேல் இங்குக்,
கொண்டநற் பொருளைப் போக்கும்
குடித்தீமை எடுத்துச் சொல்வார்!
மண்டையில் உறைத்தால் உண்டு;
மனத்தினில் பதிந்தால் உண்டே!
அண்டையின் குப்பை மேட்டில்
அதைப்போட்டால், நாமும் குப்பை!

(பண்டரிநாதனின் ‘பொருள்’ பாட்டு)


இனி,
பன்னீர்ச் செல்வப் பாவலர் வந்து
நன்னெறிக் குலத்தை நசுக்கும் மதுவினைப்
பற்றிப் பாடுவார்! பயன்பெறக் கேட்போம்.


(பன்னீர்ச் செல்வத்தின் ‘குலப்’ பாட்டு)

(வேறு)


இனி,
கோவி - தமிழேந்தி கொண்ட முயற்சியெல்லாம்
தாவி யழியும் தகைகாண்பார் - கேவி
அழச்செய்யும்; ஆற்றழிக்கும் ஆன்றவறந் தீய்க்கும்;
விழச்செய்யும் கட்குடியால் வீண்!

(கோவி. தமிழேந்தியின் ‘முயற்சிப்’ பாட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/126&oldid=1448470" இலிருந்து மீள்விக்கப்பட்டது