பக்கம்:கனிச்சாறு 8.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


தாயின்மேல் ஆணையிட்டான்! தந்தையின்மேல் ஆணை.
தமிழகமேல் ஆணையிட்டான் செந்தமிழைக் காக்க!
தூயதமிழ் வளர்த்திடுவீர் தோழரீர்என் றிசைத்தான்!
தொல்தமிழர் நாடியெல்லாம் நரம்பெல்லாம் மீட்டி
ஏயநறுந் தமிழுணர்வை ஓடவிட்டான்! தமிழை
‘இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடே’னென் றார்த்தான்!
நாயினுங்கீ ழாய்த்தமிழர் நலிவதுகண் டுள்ளம்
நைந்துருகி ‘உடல்தருவேன் உயிர்தருவேன்’ என்றான்!

வெண்ணிலவும் வானும்போல் வீரனும்வா ளும்போல்
விரிவண்ணப் பூவும்அதன் மணமும்போல் யாழும்
பண்ணிவரும் இசையும்போல், கண்ணும்ஒளி யும்போல்
பைந்தமிழும் தானும்எனப் பண்ணிசைத்துப் பாடி
எண்ணிலவர் உணர்வுளத்தில் செந்தமிழ்த்தீ மூட்டி
எரிகின்ற நெஞ்சின்மேல் - செந்தமிழ்மேல் ஆணை
பண்ணியினப் புரட்சிக்கு நெய்யூற்றி விட்டான்!
பாவேந்தன் பாரதிதா சன்புரட்சி வேந்தன்!

மூவேந்தர் மனத்தொட்டில் துயின்றெழுந்தே அன்னார்
முடிமீது காலுதைத்து மடியில்விளை யாடி
நாவேந்தும் முக்கழகப் புலவர்கைத் தவழ்ந்து
நம்காலில் நசுக்குண்டு குற்றுயிராய்க் கிடந்தும்
சாவேந்தா நந்தமிழ்த்தாய் தனைப்பாடிப் பாடிச்
சலிப்படையாப் புலவன்பா ரதிதாசன் என்னும்
பாவேந்தன் திருவுளத்தின் கருத்துநலன் யாவும்
பாவலர்க்கோ உணர்வூற்று! கருத்துமழை! செந்தீ!

இயற்கையினில் அவன்தொட்ட இடமெல்லாம் சிரிக்கும்!
இனப்பேச்சில் அவன்மூச்சின் துடிதுடிப்பும் கேட்கும்!
மயற்கையிலாச் சீர்த்திருத்தம் அவன்பாட்டில் மணக்கும்!
மருண்டிருண்ட நாட்டில்அவன் பாவிளக்கை ஏற்றும்!
முயற்கையைத் தீண்டுதற்குள் முகம்வெயர்த்துக் கொட்டும்
மோழையனின் கோழைமனம் அவன்பாட்டைக் கேட்டால்
பெயற்கைமழை மேகமெனும் பெருங்களிற்றின் தலையைப்
பெயர்த்தெடுக்கும் எண்ணம்வரும் வீரம்வரும் என்பேன்!
அவன்பாட்டில் தமிழ்பொழிந்த அமிழ்தமழை போல்
அன்றிருந்திந் நாள்வரைக்கும் அணியணியாய் நிற்கும்
எவன்பாட்டில் தமிழ்பொழிய நாம்கண்டோம்? கேட்டோம்
இதுவரைக்கும் இருந்ததில்லை; இனிமேலும் இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/132&oldid=1448477" இலிருந்து மீள்விக்கப்பட்டது