பக்கம்:கனிச்சாறு 8.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

சீழெடுத்த வரலாற்றைப் புதுப்பிக்க எண்ணிச்
செந்தமிழிற் சொல்லெடுத்துத் தேனினிமை சேர்த்தே
யாழெடுத்துப் பாட்டிசைத்தான் அவன்புகழைப் பாட
யாப்பொன்று போதாது; பாத்தோப்பே வேண்டும்!

பூவேந்தி மணியேந்திப் பொலிவேந்தி இளமை
பூரிக்கும் மார்பேந்திக் கிளிமொழியும் தோற்கும்
நாவேந்தி இளஎகின நடையேந்திக் கலையின்
நலனேந்தி நச்சரவம் பெண்களின்பேர் ஏந்தி
மூவேந்தைச் சாய்த்(து)அவர்பால் ஆரியத்தை ஊன்றி
முன்னிருந்த தமிழ்க்குலத்தின் சீர்சாய்த்த பின்னைப்
பாவேந்தாய் அக்குலத்தைக் காத்திடற்கு வந்தான்!
‘பாரதிதா சன்’ அவன்பேர்! பாவுலக வேந்தன்!

ஆரியர்பால் ஆங்கிலர்பால் வேற்றினத்தார் பலர்பால்
அழகுதமிழ் சிக்கியதன் சொல்திரிந்து பொருளும்
பூரியர்தம் வடமொழியால் உட்சிதைந்து பலவாய்ப்
புல்லுருவம் கொண்டுநமின் உள்ளுணர்வும் போக்கி
நேரியலா மறைமுகமாய் இனமழியும் போதில்,
நெட்டுயிர்த்துத் தமிழரெலாம் தத்தளிக்கும் நாளில்
சீரியசெம் பாவிசைத்தே இனம்புதுக்க வந்தான்!
செந்தமிழ்பா ரதிதாசப் பாவேந்தன் என்பான்

‘தமிழியக்கம்’ தொடங்கிவைத்தான்! செயல்முறைகள் தந்தான்!
தப்பறைகள் கிழித்தெறிந்தான்; தமிழ்முரசும் ஓச்சி!
அமிழ்தூற்றாய்ப் பாப்பெருக்கி ‘அழகின்சிரிப்’ பீந்தான்!
அழியாநல் இலக்கியமாம் ‘குடும்பவிளக்’ கென்னும்
கமழ்தரும்இல் லறநூலைக் கற்கண்டில் தோய்த்துக்
கசிகின்ற தீந்தமிழால் நாம்சுவைக்கத் தந்தான்!
உமிழ்கின்ற கொச்சைநடைப் பாவலர்தம் வாய்மேல்
உலக்கையடி தந்துமனம் கலக்குறவே வாழ்ந்தான்!

‘பாண்டியனின் பரிசீ’ந்தான்! 'கழைக்கூத்தி காதல்’
‘பாத்தொகுப்பு’, ‘நாடகங்கள்’, எதிர்பாரா முத்தம்’
மூண்டதமிழ் கொழித்துவரும் ‘இசையமுத’ நூல்கள்!
மொய்க்கும் ‘இளை ஞர்விரும்பும் ‘இலக்கியங்கள்’, ‘சேர
தாண்டவமும்’ ‘நற்காதல் நினைவுகளோ’ ‘டமைதி’
‘நல்லதீர்ப்’ பெனும்நூலோ டின்‘குறிஞ்சித் திட்டு’
கீண்டெழுந்த ‘சௌமியன்’ ‘கண் ணகிபுரட்சிக் காப்பியம்'
கெழு ‘மணிமே கலைவெண்பா’ எனும்பலநூல் தந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/131&oldid=1448476" இலிருந்து மீள்விக்கப்பட்டது