பக்கம்:கனிச்சாறு 8.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  137

தொடையினிலே கயிறுபிறர் திரிக்கத்தூங் குகின்றோம்!
ஏங்கினவன் பாவேந்தன்! எடுத்தெடுத்துச் சொன்னான்!
எந்தமிழர் கேளார்கள் எனவறிந்தும் சொன்னான்!

மன்றிருந்த தமிழ்வாழ இனம்வாழ, இங்கே
மலிந்திருந்த வளமெல்லாம் என்றென்றும் வாழ,
அன்றிருந்த பெருமையெலாம் நினைவூட்டிச் சொன்னான்;
அணுஅணுவாய் எந்தமிழர் சிதைந்தகதை சொன்னான்!
வென்றிருந்த தமிழ்ஒருகால் வீரம்எனும் கொம்பில்
வீறுபெறும் கொடியாகப் பறந்தகதை சொன்னான்!
இன்றிருக்கும் தமிழனுக்கோ சோற்றுருண்டை மீதில்
இருந்துவரும் ஆசையிலே எதையெண்ணிப் பார்ப்பான்?

‘செந்தமிழே உள்ளுயிரே நறுந்தேனே என்றன்
செயலெல்லாம் மூச்செல்லாம் உனக்களித்தேன் யானே!
நைந்தாய்,நீ எனில்நைந்து போகுமென்றன் வாழ்வே

நன்னிலைஇங் குனக்கென்னில் எனக்கும்அது தானே!’


செந்தமிழில் இக்கருத்தை அவனெழுத வில்லை!
செங்குருதிச் சேற்றினிலே எலும்பொடித்துத் தோய்த்தே
எந்தமிழர் உணரட்டும் வாழட்டும் என்றே
எழுதிவிட்டுப் போனாபுழுதியிலே போட்டோம்!

நல்லுயிரும் வல்லுடலும் செந்தமிழும் மூன்றும்
நான்நானென் றார்த்தெழுந்தான்; வீண்வீணாய்ப் போனான்!

சொல்லிலுயிர் கலந்தெழுதி மூச்சினிலே பாடிச்
சோர்ந்தவினம் ஆர்த்தெழவும் பார்த்திருந்தான் காலம்!
வெல்லுமடா எந்தமிழும்! வெற்றிநிலை வாய்க்கும்;
வீணரல்லர் தமிழர்’என வீறுபெறச் சொன்னான்!
மெல்லமெல்ல நந்தமிழர் அவன்பாடல் கேட்டார்!
வேற்றுமொழிக் காரனுக்கே அதையெடுத்து விற்றார்

தமிழையவன் காதலித்தான் அடடா,ஓ அடடா!
தமிழினத்தைக் காதலித்தான் அட்டா,ஓ அடடா!
தமிழையவன் தாயென்றான் அட்டா,ஓ அடடா!
தமிழினத்தை உயிரென்றான் அடடா,ஓ அடடா!
தமிழையவன் இறையென்றான் அடடா,ஓ அடடா!
தமிழினத்தை உடலென்றான் அடடா,ஓ அடடா!
தமிழையவன் காதலித்தும் தமிழினத்தைப் பார்த்தும்
தமிழாகிப் போனானே அடடா,ஓ அடடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/151&oldid=1448537" இலிருந்து மீள்விக்கப்பட்டது