பக்கம்:கனிச்சாறு 8.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


12. புரட்சிப் பாவேந்தர் விழாப்
பாட்டரங்கம்


முன்னுரை:

பேரன்பு மிக்க பெரியோரே! தாய்மாரே!
பேராசிரியப் பெருமக்காள்! நல்லிளைஞீர்!
பாட்டரங்கம் தன்னில் நலஞ்சுவைக்க வந்த, தமிழ்
அன்புடையீர்! இனநலம் ஆர்க்கின்ற நல்லவையீர்!
என்பு நெகிழ்ந்துருக யாவரையும் வணங்குகின்றேன்!

புரட்சிக்குப் பாவேந்தன்! பொங்குதமிழ்ப் பேரினத்தின்
மருட்சி நீக்கவந்த மாமருந்து! ஆரியத்தைப்
பாட்டால் அடித்துப் பதைபதைக்க வைத்ததமிழ்க்
கோட்டுக் களிறு! கொட்டிவைத்த பாக்குவியல்!
கூனாத நெஞ்சன்! குறைவுபடாக் கொள்கைமலை!
ஆனான பாட்டனெல்லாம் அவனடிக்குத் தாளாமல்
நெஞ்சை நசுக்கிக்கொண்ட நேர்ச்சியினை நாம் கண்டோம்!

பஞ்சைப் பா வலனல்லன்; பாய்ந்தெழுந்த தேனருவி!
அஞ்சாமல் யார்க்கும் அரிமாப்போல் முழங்கியவன்!
துஞ்சாமல் தோளுயர்த்தித் தமிழினத்தைத் தூக்கவந்தோன்!

பொன்புதுவைத் திருநகரில் பூத்தெழுந்த செங்கதிரோன்!
தன்பதவி வாழ்க்கை தன்மனைவி தன்மக்கள்
என்கின்ற தந்நலத்தார் இடுப்பொடிக்க வந்தமன்னன்!

நாளுக் கொருகொள்கை நாழிகைக்கோர் கட்சியதாய்
ஆளுக்குத் தக்கபடி அடிமடியை நிரப்புகின்ற
ஊத்தை அரசியலைத் தூவென் றுமிழ்ந்துவிட்டு
மாத்தமிழ்மேல் அன்பும் மாண்புத் தமிழினத்தின்
முன்னேற்றம் தன்னில் முழுநோக்கும் கொண்டவனாய்த்
தன்னேற்றம் பாராமல் தமிழே உயிரென்று
பாடல் குவித்த பாவல்லோன்! பாட்டுமலை!
ஊடல்மிகு காட்சிகளை உதிர்த்த உலுத்தனல்லன்!

குடியும்கூத் தியுமாகக் கொம்மாளம் போட்டபடி
விடியும்வரை விலைப்பெண்டிர் வெயர்வையிலே குளித்துவிட்டு
விடிந்தபின்னே ‘அர்த்தமுள்ள இந்துமத வேதாந்தம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/156&oldid=1448547" இலிருந்து மீள்விக்கப்பட்டது