பக்கம்:கனிச்சாறு 8.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 141

இறுதியிலே உங்கட்குச் சொல்லுகின்றேன் பெரியீர்!
எந்தமிழத் தாய்மாரே! இளைஞர்களே! தமிழீர்!
உறுதியிலே நமக்குய்தி உண்டென்றால் முதலில்
உய்தியுற வேண்டும்தமிழ்! உலகுணர வேண்டும்!

வெறுமுடலில் ஓடுமுயி ரோடுகலந் தோடி
விரிந்துசெலும் நாடிநரம் பெலும்பிலெலாம் தமிழே
மறுவின்றித் திகழ்ந்துணர்வாய்ப் பாய்ந்தோடல் வேண்டும்!
மாபெரிய தமிழினமும் மிகச்செழிக்க வேண்டும்!

வரம்பொன்றால் தமிழ்வரம்பு! வாழ்வும்நமக் கதுவே!
வல்லுணர்வால் பாவேந்தன் முழங்குகின்றான் கேளீர்!
உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்குத் தீமை
ஒருநிலையில் நேர்ந்ததென நாமுரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாய்
நண்ணிடவும் வேண்டும்; செயல் முன்னிடவும் வேண்டும்!!
இரும்பன்றோ நம்தோள்கள்! எழவேண்டும் அன்றோ?
எந்தமிழப் பாவேந்தன் இடிமுழக்கம் கேளீர்!

‘ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள் சேர்ப்பாய் இன்பத்தை
                                   ஆக்குவிப்பாய்
ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
                                   உணர்ச்சி கொண்டே!’

“நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு!
பொன்மொ ழிக்குநீ, புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்

தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/155&oldid=1448546" இலிருந்து மீள்விக்கப்பட்டது