பக்கம்:கனிச்சாறு 8.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


மற்றபடி பாரதிக்கே மதிகொடுக்கும் நல்லாசான்!
கற்றபடி தானே கணக்குவைத்துப் பேசிடுவோம்!

ஈங்கதனால் தானே இவனுக்கு விழாவெடுத்தார்!
தூங்குகின்ற நந்தமிழர் உணர்வுக்குத் தீவைத்தார்!
புரட்சிப்பா வேந்தர்க்குப் போற்றுவிழா அமைத்ததனால்
மருட்சி யடைந்திருப்பார் நம்பகைவர் மனம் நைந்தே!

வீரமணி தளபதியாய் வீற்றிருக்கும் கழகத்தின்
சாரம் மிகுந்திருக்கும் சாயாத் தமிழ்மறவர்
கூட்டமிது! இங்கே கூடிநின்று பாவேந்தைப்
பாட்டால் வணங்குகின்ற பாவலர்கள் வந்துள்ளார்!
பாவேந்தைப் பாடினால் பணம்வந்து சேராது!
ஆவல் அடங்கும்! அடிவயிறு தான்குளிரும்!
மேனியெலாம் நன்றியெனும் நல்லுணர்வால் மேல்
                                                           (சிலிர்க்கும்!
தேனில் விழுந்ததுபோல் நாவெல்லாம் தித்திக்கும்!
உள்ளம் கிளர்ச்சியுறும்! உயிரும் உவகைபெறும்!
குள்ள நினைவழியும்! கோபுரமாய் வாழ்வுயரும்!
மூவா யிரமாண்டாய் முழுநலமும் வீழ்ந்துவிட்ட
காவாத் தமிழினமும் காலெழுந்து வீறுபெறும்!

அத்தகைய ஆண்மையின் அரசர்க் கரசனவன்!
புத்தொளியைப் பாய்ச்சிவிட்ட புரட்சிப்பா வேந்தனவன்!

புதுவையிலே பிறந்தகுயில்! புரட்சிப்பண் இசைத்தகுயில்!
எதுசெய்வோம் நாட்டுக்கே எனத்துடித்த இளைஞர்களைத்
‘தமிழுக்குத் தொண்டுசெய்க; தமிழனுக்குத் தொண்டுசெய்க;
அமிழாத நல்லுணர்வால் ஆட்சி அமைத்திடுக’
எனத்தட்டி எழுப்பி எழுச்சிக் கனல்மூட்டி
மனத்திட்டை மேடாக்கி மாமலையைக் கடுகாக்கி
‘முன்னேறு முன்னேறு’ எனவுணர்ச்சி மூட்டியவன்!
இந்நேரம் அவனிருந்தால் எந்தமிழர் இங்கேவோர்
நல்லாட்சி கண்டிருப்பார்! நாற்புறமும் வென்றிருப்பார்!
பொல்லாதஆட்சிப் பொடியரெலாம் வீழ்ந்திருப்பார்!

பாக்கலைக்கே உயிர்தந்த பாவேந்தன் இன்றிருந்தால்
மூக்கறைகள் சாக்கறைகள் முன்னேறி மேல்வருமா?
சந்தியிலே புரண்டெழுந்து சாய்க்கடைகள் பாட்டெழுதும்
இந்த இழிநிலைதான் எந்தமிழ்க்கு வந்திடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/158&oldid=1448550" இலிருந்து மீள்விக்கப்பட்டது