பக்கம்:கனிச்சாறு 8.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  146


மதுப்புட்டில் உடைந்ததுபோல் மடக்கு வரியெழுதிப்
புதுப்பாட்டு என்றுரைக்கும் புன்மைநிலை தோன்றிடுமா?
எம்பாடல் வேந்தனவன் இல்லாத போழ்திலன்றோ
தம்பாடல் மேலென்று தமுக்கடித்துத் திரிகின்றார்!

(வேறு)


“தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தட்டா!
அன்றந்த இலங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான்! கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்!
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!”

(வேறு)


“சிங்களஞ் சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரென்று ஊதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்

சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு”

(வேறு)


- என்றெல்லாம் பாடியவன் இன்றிருந்தால், இலங்கையிலே
கொன்று குவிக்கப் படுவாரா எந்தமிழர்?
பொற்பிழந்தும் சொத்திழந்தும் பிழைக்க வழியிழந்தும்
கற்பிழந்தும் வாடுகின்ற கன்னித் தமிழ்மகளிர்
கண்ணீரைக் கண்டு கனல்பறக்கும் நெஞ்சோடு
செந்நீரால் பாட்டெழுதிச் சீறித் தடுக்கானா?

இனநலத்தைக் காக்கவந்த எந்தைப் பெரியார்க்கு
மனநலத்தை ஊக்கவந்த மாணிக்கப் பரிதியவன்!

அத்தகைய பாவேந்தர்க் கமைத்த விழாவிதுவாம்!
முத்தனைய பாடல்களை முழங்குதற்குப் பாவலர்கள்
வந்திங்கே வீற்றிருப்பார்! வாழ்வுயரப் பாடிடுவார்!
நொந்த உளத்தினது நோக்காட்டைப் போக்கிடுவார்!
பாவேந்தன் முன்னரே பாடிவைத்தான் தம்பிறப்பை!
ஆவலால் அதைச்சொல்வேன் அமைந்ததனைக் கேளுங்கள்!

(வேறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/159&oldid=1448553" இலிருந்து மீள்விக்கப்பட்டது