பக்கம்:கனிச்சாறு 8.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  155


“ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்புமணம்
செய்வாயா?"

“குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசங்கெட்டுப் போனது நமதுநன் னாடு”

“கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்
கடவுள் என்ற நாமதேயம்
கழறி டாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக
உலகு நன்று வாழ்ந்ததாம்!

“உடை சுமந்த கழுதைகொண்டு
உழைத்ததோர் நிலைமையும்
உடைமை முற்றும் படையை ஏவி
அடையும் மன்னர் நிலைமையும்
கடவு ளாணை யாயின், அந்த
உடை வெளுக்கும் தோழைரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ - தன்

கழுதைதான் முன்னேற்றுமோ”


(வேறு)


- இப்படிப் பலவாறாக எழுதினார் பாவின் வேந்தர்!
தப்படிக் கூற்றாய் முன்னம் தகவிலார் கட்டி வைத்த
செப்படி வேலை யெல்லாம் சிறுமையை இகழ்வை எல்லாம்
முப்படி அடித்துத் தள்ளி மூடக்கொள் கைகடிந்தார்!

4. பெண்ணுரிமைக்குரல்!

தாலாட்டுப் பாட்டிலேயே பெண்ணுரிமை பேசுகின்றார்.

“மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”

“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/169&oldid=1448574" இலிருந்து மீள்விக்கப்பட்டது