பக்கம்:கனிச்சாறு 8.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  157


“காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்தகுடை தூக்கி - நல்ல
கல்விக் கழகமதை நோக்கிக் - காய்ச்சும்
பாலுக்கு நிகர்மொழிப் பாவை நீ செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி பாக்கி”

“மேலுக்குச் சட்டையிட்டு மெல்லியசிற் றாடைகட்டி
வீட்டினின்றும் ஆட்டமயில் போலே - கைம்
மேற்சுவடி யோடுதெரு மேலே - கூர்
வேலுக்கு நிகர்விழி மெல்லி நீ செல் வதைக்காண
வேண்டுமே இப் பெற்றவள்கண் ணாலே!”

(வேறு)


“பெற்றநல் தாய்தந்தை மாரே - நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!”

மணவுரிமை!

“மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே, நீ
மங்கை எனும் பருவம் கொண்டு காதல்
வாழ்வுக் கோர் மாப்பிள்ளையைக் கண்டு - காட்டித்
‘தேவை இவன்’ எனவே செப்பும் மொழி எனக்குத்
தேன், கனி, தித்திக்கும் கற் கண்டு”

(வேறு)


“கலியாணம் ஆகாத பெண்ணே- உன்
கதிதன்னை நீ நிச்சயம் செய்க கண்ணே
வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்சில பேர்கள்!
நல்லவிலை பேசுவார்கள் - உன்னை
நாளும் நலிந்து சுமந்துபெற் றோர்கள்!

கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையும் காட்டார்!
வல்லி உனக்கொரு நீதி! - இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்!
கற்றவளே ஒன்று சொல்வேன் - உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!”!
“ஞாயந் தராவிடில் விடுதலை மேற்கொள்”
“மண்ணாய்ப் போக மண்ணாய்ப் போக
மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/171&oldid=1448578" இலிருந்து மீள்விக்கப்பட்டது