பக்கம்:கனிச்சாறு 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


(வேறு)

“நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்
ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி

உழைத்திட நான் தவறேன்”

(வேறு)


சாவேந்தாப் புகழ்பெற்ற நல்லுணர்வுச் சான்றோன்,அப்
பாவேந்தன் குறிக்கோளைப் பாடுகின்றான் கேளுங்கள்!

(வேறு)


புதுவைக் குயிலொலித்த புதுமைக் குரல்தன்னில்
பொதுமை உணர்வால் பொலிந்த தமிழுள்ளம்
இன்றுவரை பிறர்அறியா இனவுணர் வுள்ளம்
நம்மவரை மேலுயர்த்தும் நாட்டுணர் வுள்ளம்
எம்மவர்க்கே இன்பூட்டும் இயற்கை வுணர்வுள்ளம்
காளையர்க்கும் கன்னியர்க்கும் இனிக்கும் காதலுள்ளம்
என்றெல்லாம் பாவலர்கள் இங்கெடுத்துப் பாடவுள்ளார்!
தொன்றெழுந்த உள்ளுணர்வால் எழுச்சி தோற்றுவிப்பார்!
இங்கெடுத்துப் பாடுகின்ற பாடல்களை நீங்களெல்லாம்
பொங்கும் உணர்வோடும் பூரிக்கும் நெஞ்சோடும்
அமைந்திருந்து கேட்கும்படி ஆவலினால் வேண்டுகின்றேன்!
இமைதிறந்து கண்பார்த் திருந்து!

1. தமிழுள்ளம் -புலவர் இறைக்குருவனார் வருகை அழைப்பு

பாவேந்தர் உள்ளமெனும் பாத்தோப்பில் தமிழுள்ளம்
பாடுவார் இறைக்குருவ னார்!
பைந்தமிழில் புலவரவர்; பாவேந்தர் உளமறிவார்!
பன்னூல்கள் யாத்த திறவோர்!
தேவேந்தன் அழைத்தாலும் தமிழ்க்கொள்கை மாறாதார்!
தீமைக்குத் துணைபோகாதார்!
திரு.வி.க., மறைமலை சார் தீந்தமிழின் வழிமரபார்;
தேவநேயர்க்கும் துணைவர்!
நாவேந்தும் தனித்தமிழில் நயமுறவே பயிற்றுவிக்கும்
நற்றிறமும் வாய்ந்த திருவார்!
நாளிதழாம் முரசொலியில் கலைஞர்க்குத் துணையாக
நாள்தோறும் தொண்டுசெய்வார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/178&oldid=1448613" இலிருந்து மீள்விக்கப்பட்டது