பக்கம்:கனிச்சாறு 8.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


நாவேந்தி உரைத்திட நம்மிடை வருவார்!
அருந்தமிழ் பயிற்றும் ஆசிரியர் என்னும்
பெருந்தமிழ்ப் பணியால் பைந்தமிழ் வளர்ப்பவர்!
அன்னவர் தம்மை அழைப்போம்! இயற்கையின்
நன்னரும் பாக்களை நயமுடன் வழங்கவே!

5. பாவேந்தர் பொதுமையுள்ளம் - பாவலர் முல்லைவாணன்

பாவலர் முல்லை வாணன்
பாவேந்தர் பொதுமை யுள்ளம்
ஆவலால் வந்துரைப் பார்!
அவர்வரவை வாழ்த்துவோம்!
மேவியிருந்தசிங்கை யிலிருந்து
மேன்மைத் தமிழ்வளர்த்தவர்!
ஆவியால் தமிழையும்
உடலால் இனத்தையும் கொண்டவர்!
பாவேந்தர் பொதுமை யுள்ளம்
பாடுவார் முல்லை வாணன்!
மூவேந்தர் இருந்தால் இங்கே
பாவேந்தர்க்கு ஊரளிப்பார்!

6. காதலுணர்வு பொன்னடியான்

புதுவைப்பா வேந்தன்வழிப்
பூத்திருக்கும் பாமலருள்
பொன்னடியான் என்னும்
புரட்சிமலர் ஒன்றாகும்!
நன்னரும் இம்மலர் நாடறிந்த பாமலர்!
கடற்கரைப் பாவரங்கம் கூட்டும் கவின்மலர்!
கெடற்கரிய பாக்கள் கிடைத்துள் ளனஅவரால்!
முல்லைச் சரமென்னும் முழுப்பாடல் நல்லிதழை
நல்ல நல்ல பாக்களுடன் நயந்தளிக்கும் பாட்டறிஞர்!
அன்ன பாவலர்தம் ஆசிரியர் உள்ளத்தில்
காதல் உணர்வு களிக்கின்ற உணர்வுதனை
ஈங்கெடுத்துச் சொல்வார்! இருந்துநாம் கேட்போம்.

முடிவுப்பா:

புலவர் இறைக்குருவனார் பாவேந்தர் தமிழுள்ளம்
இலகுசெந் தமிழில் நன்கெடுத்துக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/180&oldid=1448615" இலிருந்து மீள்விக்கப்பட்டது