பக்கம்:கனிச்சாறு 8.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  183


மெத்த வுணர்ந்துரைத்த மேதையவர்; வீரரவர்!
செயலினையும் மூச்சினையும் செந்தமிழுக் கியக்கியநல்
வயவரவர்! வண்டமிழ்க்கு வாழ்வளித்த வள்ளலவர்!
நைந்தது தமிழென்றால் நைந்ததுஅவர் வாழ்வென்றார்!
உய்ந்தது தமிழென்றால் உய்ந்ததவர் உயிரென்றார்!

- இவ்வாறு தம்முயிரை எழில்தமிழோ டிணைத்தபடி
ஒவ்வாத பதவிக்கும் பணத்துக்கும் உழலாமல்
தமிழாக வே பிறந்து, தமிழாக வே, வாழ்ந்த
தமிழ்ப்புலவர் அவர்போலத் தமிழகத்து வரலாற்றில்
எந்த ஒரு புலவர் எப்பொழுது வாழ்ந்து சென்றார்?
சிந்தித்துப் பாருங்கள்! சிந்தனைக்கும் ஒருவருண்டா?

அவர் கனவு ஒன்றிரண்டா? அவர்விழிப்பு தமிழ்விழிப்பு!
அவர் தூக்கம் கூட அழகு தமிழ்த் தூக்கமன்றோ?
ஊக்கத்தால் மிகையுணர்வால் உரைக்கவில்லை!;
                                                            அன்பர்களே!
மாக்களைப்போல் நாம்உறங்கும் வேளையிலே உளறுகின்றோம்;
பாக்களெல்லாம் தமிழ்கொழிக்கும் பாவேந்தர் கூறுகின்றார்!
“தூக்கத்தில் பிதற்றினாலும் தூய்தமிழ் பிதற்றும் என்வாய்”
நாமும் இது போல மெச்சுதற்குப் பாடிடலாம்!
ஊமையனை மூங்கையனை உளறுவா யனையெல்லாம்
கவியரசர், பெருங்கவிக்கோ, கவிவாணர் - என்றபடி
ஆவி வருந்திடவே அழைக்கின்ற காலமிது!

நொந்து நொந்து வருந்திப்பன் னூறாண்டுத் தவமிருந்து
செந்தமிழ்த்தாய் பெற்ற செழும்பிள்ளை, பாவேந்தர்!

பாராட்டுக் காக, இப் பாட்டரங்கத் திற்காகச்
சீராட்டுஞ் சொற்களிலே செப்பவில்லை நண்பர்களே!

உண்மை உரைக்கின்றேன்; தமிழை உயிரென்றும்
கண்ணின் மணியென்றும் காக்கின்ற தாயென்றும்
சொன்ன புலவனெவன்?
                                     (-காதலியைத் தான் சொல்வான்?)
                                      -சொல்லியவன் முன்னரில்லை!
பின்னொருவன் இருப்பானேல் - பாவேந்தைப் பின்பற்றி
வயிற்றுப் பிழைப்புக்கு - வாய் வீச்சாய் நம்மிடையில்
கயிற்றைத் திரித்திருப்பான்! காலம் விடைசொல்லும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/197&oldid=1448664" இலிருந்து மீள்விக்கப்பட்டது