பக்கம்:கனிச்சாறு 8.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


கன்னித் தமிழ்த்தாயைக் கற்பழிக்கும் கயவனெல்லாம்
மின்னித் திரிகின்ற காலமிது! மிகக்கொடுமை!

பாவேந்தர் கதறியவை பழிகாரர்க் கெங்குஉறைக்கும்!
கூவிக்கூவி, அழுதார்! கொஞ்சம் நினைத்தோமா?

“கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு!
காணும் பிறமொழிக ளோ, வெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு?
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!

தமிழனே! இதுகேளாய்! - உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!
தமிழனே! இதுகேளாய்!

வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்!
நாமுணர்ந்தோம் இந்நாள் அவர் அஞ்சி விழித்தார்!

தமிழனே! இதுகேளாய்!


பாவேந்தர் நம்மை விழிப்பித்த பாடலிது!
சாவேந்தும் போதும் தமிழ் வளர்த்துச் சாகாதார்!

வறுமையிலே வெந்து நொந்து வாடியபோ தும்கூட
வெறுமைப் பயல்களைப்போல் வீணரைப்போல் இல்லாமல்
நிமிர்ந்துநின்றே வீழ்ந்த நெடுங்குன்றம் பாவேந்தர்!
திமிர்ந்துரைத்த அன்னவர்தம் பாட்டடிகள் தீர்வு சொல்லும்!

“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை - என்
தாய் தடுத்தாலும் விடேன்!
எமைநத்து வாய் - என எதிரிகள் கோடி

இட்டழைத் தாலும்தொடேன்!”


எதிரியிடும் எச்சிலுக்கே எந்தமிழை விலைபோக்கும்
உதிரிப் புலவரிடை ஒண்டமிழ்செய் பாவேந்தர்-
தமக்கு விழாவெடுக்கும் தகுதிநமக் குண்டென்று
நமக்குப் படவில்லை; நம் உரைக்கும் வருந்தாதீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/198&oldid=1448665" இலிருந்து மீள்விக்கப்பட்டது