பக்கம்:கனிச்சாறு 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 23


“எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணை!
இனியெங்கள் ஆட்சியிந் நாட்டிலே”

பாரதி தாசனார் கண்ட கனவிது:

“என் தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்.
என் தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன்; தமிழர்
நலங்காண் பேன்நான் நானில மீதிலே.”


மொழிவிடு தலையும் இனவிடு தலையும்
பழியிலாப் பாவலர் விரும்பிய கொள்கை!
பாவேந்தர் முழக்கம் தில்லி ஆட்சியை
நடுங்க வைத்தது; வடவரின் நரம்புகள்
புடைத்துத் தெறித்தன.


“வீடெலாம் விடுதலை முழக்கம் மேவுக!
ஊரெலாம் விடுதலை முழக்கம் உயர்க!
காலையில் விடுதலை முழக்கம் காட்டுக!
உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க!
உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக!
சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்
செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்
பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு
போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு”


- என்று பாவலர் முரசு கொட்டினார்;
முடியர சேற்றவர் கலங்க முழங்கினார்;
அடிமை விலங்குகள் தெறித்து விழுந்தன;
விடுதலை உணர்வு எங்கணும் படர்ந்தது;
ஆயினும் விடுதலை அரும்பிட வில்லை;

அடிமையைத் தமிழர் சாய்க்குநாள் எதுவோ,
மிடிமையைத் தமிழர் போக்குநாள் எதுவோ,
தமிழரைத் தமிழரே காட்டிக் கொடுக்கும்
கயமைத் தனங்கள் மாயுநாள் எதுவோ,
தமிழ்முன் னேற்றம் தனக்கெனத் தமிழன்
இணைந்து நிற்கும் இன்பநாள் எதுவோ,
சாதிப் பேய்கள் தலைவிரித் தாடும்
மடமைத் தமிழகம் தன்னிருள் நீக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/37&oldid=1447646" இலிருந்து மீள்விக்கப்பட்டது