பக்கம்:கனிச்சாறு 8.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

பின்னோர் எவர்க்கும் பிழைபடா நூலிது;
இதனை யாத்தவர் மாந்தராய் இருக்கார்,
அதனினும் உயர்ந்த தேவரே ஆவர்!”
என்னும் பல பொய்யுரை இட்டுக் காட்டி
‘இன்னும் பல பேறுகள் எய்துக’ என்று
வாழ்த்தி வணங்கிப் பொன்பொருள் கொடுத்து
வீழ்த்துவர் அன்னவர் காலடி? - ஆனால்
பார்ப்பன மரத்தைப் பலகையாய் அறுக்கும்
யாப்பன் றோ, இப் பாவலர் யாப்பு?
ஆரிய மெழுகை அனலிட் டுருக்கும்
சீரிய தன்றோ அன்னவர் செழும்பா!
‘புராண’ப் புளுகைப் படைப்படை அரியும்
கருக்கரி வாளன் றோ, இவர் பாக்கள்!
பன்னூ றாண்டாய்ப் பலபட ஏய்த்தவர்
வல்லூறு கண்ட எலியாய் நடுங்கினர்.
ஆகவே அவர்பா அமுக்கப் பட்டது!
வேகும் நெஞ்சொடு விலக்கப் பட்டது.
என்னினும் தமிழர் இவரால் விழித்தனர்.
பொன்னினும் பொருளினும் மேன்மை என்றனர்!
பாவேந்தர் செய்த ஆரியப் புரட்சி
சாகுந் தமிழரைச் சாகாது காத்தது.
ஆரிய இருளைச் சீய்த்த பாவலர்
நேரிய பிறிதொரு புரட்சியும் செய்தார்.
குமுகாய நிலையினில் தமிழர்கள் குமைந்த
ஒரு புடைத் தீமை உணர்த்திய பின்னை
அரசியல் வலிவால் வடவர்பால் அடிமை
யுற்றுக் கிடந்த தமிழரை நோக்கினார்.
எற்றித் திரிந்திடும் வடவரைச் சாடினார்.

பாவேந்தர் உள்ளம் பாடுதல் கேண்மின்:

“ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்.”

“செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/36&oldid=1447645" இலிருந்து மீள்விக்கப்பட்டது