பக்கம்:கனிச்சாறு 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

புன்மையொடு புன்மை புகுவதுபோல் தொண்டுசெய்யப்
போகின்றோம் நாமும்; புதுமையென்ன நாட்டிவிட்டோம்!
ஆகும் வினையில் அணுவளவும் செய்தோமா?

எத்தனையோ கட்சி, கழகமென்றும் மன்றமென்றும்
எத்தனையோ பேச்சு! எழுத்தெல்லாம் தீப்பறக்கும்;
எத்தனையோ தீர்மானம்! எத்தனையோ மாநாடாம்!
அத்தனைக்கும் இன்னபயன் என்றே அளந்துரைக்க
யாரேனும் உள்ளாரா? யாக்கைக்கு மெய்யென்று
கூறி அழைத்ததுமே கூற்றை உதைத்துவிட்டோம்
என்ற தருக்கும் செருக்கும் இருக்கட்டும்!
இன்றளவில் நாம்கண்ட தென்ன அளவிருக்கும்!
பொய்மூட்டை ஒன்றால் புளுகுமூட் டையல்லால்
மெய்மூட்டை என்ன விளைவிருக்கும், மேதகையீர்!

நாடெல்லாம் மாநாடு! நாள்தோறும் பாட்டரங்கம்!
வீடெல்லாம் ஊரெல்லாம் வெற்றி விழாக்கூட்டம்!
வானொலியில் பாட்டரங்கம்! வாய்கிழிக்கும் சொல்லரங்கம்!
வீணுக்குக் கைத்தட்டல்! வீழ்கின்ற பூமாலை!
“ஆகாகா! செந்தமிழ்க்கே ஆக்கமிது ஆக்கம்” எனும்
வேகாத பேச்சுகள்! வீழ்த்துகின்றோம் பல்கோடி!

நீண்டதொரு துண்டு! நிலம்பெருக்கும் மெல்வேட்டி!
ஆண்ட தமிழ்ச்சொல் அடுக்கிவைக்கும் சொற்சுவர்கள்!
என்னே தமிழ்வளர்ச்சி! என்னே புகழ்மாலை!
என்னே தமிழன் இருந்தநிலை! - என்றுரைத்துத்
தம்முதுகில் தாமே தடவித் தருங்காட்சி!
அம்மவோ! ஒன்றிரண்டா! அன்றாட வாழ்க்கையிது!

இன்றிந்தச் சூழலில்தான் நாமும் இருந்துகொண்டு
வென்று குவிப்பதுபோல், வெற்றிபல சாய்ப்பதுபோல்
பாட்டரங்கம் கூட்டிவிட்டோம்; பாடுகின்ற நேரமிதா?
நாட்டரங்கில் நம்பெயரோ நல்லடிமை! நாம்கொண்ட
வல்லடிமைத் தன்மைக்கு நல்லுணர்வு வந்துவிட்டால்
இல்லடிமை நீக்கி எழுந்ததோள் தாழுமுன்னர்
வேட்டரங் கங்காண வேண்டுமல்லால் இஃதைப்போல்
பாட்டரங்கம் பாடிப் பயனென்ன பைந்தமிழீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/42&oldid=1447654" இலிருந்து மீள்விக்கப்பட்டது