பக்கம்:கனிச்சாறு 8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


தூய்மை:

எந்தமிழ்த் தூய்மையை எடுத்துப் பேசின்
செந்தமிழ் உணர்வு சிலிர்சிலிர்த் தோடும்.
ஏறத் தாழ மூவா யிரமாண்(டு)
ஊறிக் கிடந்த வடமொழி உணர்வினால்
மாறிக் கிடக்கும் தமிழனின் மனத்துள்
ஏறி மிதித்தது ஆங்கிலர் ஆட்சி!
பிற்கால் பிரஞ்சும் அதனொடு சேர்ந்தது.
போர்த்துக் கீசியம் அதன்பின் புகுந்தது.

மொகலாயர் ஆட்சியில் உருது முளைத்தது.
தகவுடைத் தமிழன் தமிழினை மறந்து
கலப்படத் தமிழினில் கால்கைப் பிடித்துப்
பிழைப்பை நடத்தினான். அதற்குப் பின்னரும்
தமிழ்தன் தூய்மையில் துளிகெட விலையெனின்
அமிழ்தென இதனை, அறைவதும் தவறோ?

இத்தனைக் கலப்பினை ஒருமொழி ஏற்றால்
இத்தனைக் காலத்து உருவம் இராது.
செந்தமிழ் முனைந்தால் இன்றையும் செழிக்கும்!
இந்திமற் றில்லைவே றெந்த மொழியொடும்
தூய்மை கெடாது துலங்குதல் தமிழே!
நோய்மை புகுத்திடில் தனித்தமிழ் நொடியும்!

சத்தியம் என்பதை உண்மை வாய்மை
மெய்ம்மை எனமூன்று சொற்கள் முழங்கும்!
ஊர்ஜிதம் நீங்கிடில் உறுதி உண்டு!
உபதேசம் போயின் அறிவுரை உண்டு.
அநுபவம் என்பதைப் பட்டறி வடக்கும்.
அகங்கா ரத்தினைச் செருக்கு நீக்கும்.
இரேகை போனால் வரைநின் றிலங்கும்
இரகசியம் தன்னைக் கமுக்கம் காத்திடும்
எடுத்துக் காட்டுண்டு, உதாரணம் ஏகின்!
பரிசுத்தம் போனால் துப்பரவு ஆகும்.
பிறமொழிக் கலப்பை இன்று பிரிக்கினும்
உரமொழி, தூய்மை யுறுமொழி தமிழ்போல்
உலகினில் வேறெதும் இல்லென உணர்வீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/48&oldid=1447663" இலிருந்து மீள்விக்கப்பட்டது