பக்கம்:கனிச்சாறு 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 45


பின்னுரை:

எந்தமிழன் மேன்மைக் கெழுவரிங்கு பாடி விட்டார்.
சிந்துமிழும் பாட்டாகச் சிற்றருவித் தண் சிலிர்ப்பாய்
வெள்ளப் பெருக்காய் விரிந்தது செந்தமிழ்ப்பா!
உள்ளங் குளிர்ந்தோம்! உலகம் மறந்துவிட்டோம்!
பாட்டரங்கம் கூடிப் பலர்பாடி நிற்பதுவும்
கேட்டு அரங்கக் கூரை கிடுகிடுக்கக் கைகொட்டிப்
பாராட்டிப் போவதுமே பார்க்கின்றோம் நாட்டிடையில்!
பாராட்டல் தீதன்று! பாராட்டால் என்னபயன்?

நாமணந்து கொண்ட பெண்ணை நான்குபேர் முன்னிறுத்தி
நாமணக்க வாய்மணக்க நல்லோர் செவிமணக்கப்
பாராட்டிப் பேசிப் பலவாய்ப் புகழ்ந்துரைத்துச்
சீராட்டிக் கொண்டிருப்ப தொன்றே சிறப்பாமோ?
இல்லறம்மேற் கொண்டொழுக வேண்டாவா? இல்லறமும்
நல்லறவோர் கண்டு நயந்துரைக்க வேண்டாவா?

அவ்வுரைக்குப் பின்னும் அனைத்துலகும் தாமகிழ
ஒவ்விப் பொதுத்தொண்டால் ஓங்குயர வேண்டாவா?
இந்தப் பயன்தானே எல்லாரும் கண்டபயன்!
அந்தப் பயன்தான் அனைத்துக்கும் வேரென்பேன்!

செந்தமிழும் மேன்மையுறச் செப்பினார் பல்வழிகள்.
அந்தவழி கேட்டபின்னும் அப்படியே நின்றமெனில்
பாட்டரங்கால் கண்ட பயனென்ன? மாணவரீர்!
கூட்டுக்குள் ஆவி குடிகொண்ட நாள்தொடங்கி
நாம்தமிழர் என்றே நனியுரைத்துக் கொள்கின்றோம்!
ஆம் தமிழர் தாம்; அதற்கே அட்டியில்லை; ஆனாலும்
எப்படிநாம் வாழ்கின்றோம்? எப்படிநாம் வாழ்ந்திருந்தோம்?
அப்படிக்கு மேலே அரைப்படியைத் தாண்டினமா?

மாணவர் தம்பணி சொன்னார்ஓர் மாண்புலவர்!
மாணவர் தம்மின் மனத்துள் தமிழ்உளதா?
மாணவர் வாயில் மணப்பதுவும் செந்தமிழா?
நாணவேண் டாவா? நடப்பதென்ன? சொல்வதென்ன?
அற்றைத் தமிழை அறிந்துணர வேண்டாவா?
கற்றை உருபாத்தாள் கண்டுவிட்டால் நாம்தமிழை
முன்னர் இழப்போம்! முழுமனமும் பின்னிழப்போம்!
இன்னுயிராம் மானம் இழப்போம்; நாம் வாழ்விழப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/59&oldid=1447921" இலிருந்து மீள்விக்கப்பட்டது