பக்கம்:கனிச்சாறு 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 கனிச்சாறு - எட்டாம் தொகுதி

நம்தந்தை, பாட்டன், அவன்தந்தை தந்தையெல்லாம்
தம்தந்தை சொன்னதென்று தாம்நம்பி வந்தார்கள்!
ஏனென்று யார்கேட்டார்? எப்படியென் றார்எதிர்த்தார்?
நானென்று வந்தவரை நாலினத்தா ரும்கடிந்தார்!

எந்தமிழர் மூளை இருளில் புதைந்தகதை,
வந்தார் அவர்தம்மை வாழாமல் செய்தகதை,
செந்தமிழை விற்றகதை, செத்தொழிந்து போனகதை,
எந்தமிழர் அந்நாள் இடுப்பொடிக்கப் பட்டகதை,
- என்ற கதையெல்லாம் என்றைக் கொழியுமோ
அன்றன்றோ முத்தமிழ்க்கே ஆன்ற விழாநாளாம்!
அந்தநாள் வந்ததுவோ? ஆர்த்தனரா எந்தமிழர்?
இந்தநாள் தானதுவோ? ஏற்றதிரு நாளிதுவோ?
மாணவரோ? அற்றை மறக்குலமோ? இல்லையிவர்
வீணவரோ? இன்றும் விழிபுலராப் பேதையரோ?
என்று பலவாறாய் எண்ணியுளம் மாழ்குகின்றேன்.
“அன்றன்று, நாங்கள் அடிமைத் தமிழ ரல்லர்!
வேல்மறவர் கூட்டம்! விறல்பாண்டி யக்கூட்டம்!
ஆல்போற் பரந்துயர்ந்த அற்றைத் தமிழ்க்கூட்டம்!
ஒக்கூர்மா சாத்தி உரைத்த மறக்கூட்டம்!
நற்காவற் பெண்டு நவின்றசோ ழக்கூட்டம்!
நக்கண்ணை வேண்டிநின்ற நாணாச்சே ரர்கூட்டம்!
இக்கூட்டம் தன்னை எவர்வெல்வார்?”. என்பீரால்
அக்கூட்டந் தன்னை அடிவணங்கி வாழ்த்துரைப்பேன்.

நல்லறிவு தோன்றிவிடின் நல்லுணர்வு வீறாதோ?
நல்லுணர்வு வீறிவரின் நாமுயர்வு காணோமோ?
நாமுயர்வு கண்டுவிடின் நன்முயற்சி முங்காதோ?
நன்முயற்சி முங்கிவிடின் நம்மிழிவும் நீங்காதோ?
நம்மிழிவு நீங்கிவிடின் நம்மடிமை சாகாதோ?
நம்மடிமை செத்துவிடின் நம்தமிழும் மேன்மையுறும்!
நந்தமிழும் மேன்மையுறின் நந்தமிழர் ஒன்றாரோ?
நந்தமிழர் ஒன்றியபின் நம் நாட்டை வெல்லோமா?
நம்நாட்டை வென்றுவிடின் நம்வாழ்வும் பூக்காதோ?
நம்வாழ்வு பூத்துவிடின் நல்வளமும் காய்க்காதோ?
நம்வளமும் காய்ப்பின் பொதுமை கனியாதோ?
ஆகவே மாணவரீர்! ஆர்த்து நடையிடுவீர்!
ஏகுகின்ற போக்கில் இடர்வந்தால் தூள்! தூள்! தூள்!
எந்தமிழின் மேன்மைக் கெழுவரிங்கு பாடுகின்றார்!
அந்தமொழி கேட்போம் அமர்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/58&oldid=1447920" இலிருந்து மீள்விக்கப்பட்டது