பக்கம்:கனிச்சாறு 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 43

பாசி பிடித்த பழங்குப்பை கூளங்கள்
மாசு விளைவிக்கும் ‘சாதி’ மதப் பகைகள்
பொல்லாப் புராணங்கள், பூழ்க்கை இழிகதைகள்
எல்லாமும் தீயிட் டெரிக்கின்ற நாளிதுவோ?

முந்தைப் பிரமன் முகத்தொருவன், தோளோருவன்,
அந்தப் பிரமன் அடித்தொடையி னின்றொருவன்,
பீக்காலி னின்றொருவ னாகப் பிறப்பெடுத்தார்!
. கேட்க அருவருப்பு! கேளுங்கள் மாணவரே!
மூக்கில் முகத்தில் முளைத்தொருவன் தோன்றுவனேல்
மூக்கா கருவாய்? முகமா கருப்பை?
மயிர்முளைக்கும் மாந்த முகத்திலென்றால் உண்மை;
உயிர்முளைக்கும் என்றால் உலகத்தார் ஒப்புவரா?
தோளில், தொடையில், காலிலெல்லாம் தோற்றமென்றால்
மூளையில்லா மக்களாநாம்? முக்காலும் நம்பிட!
அங்கெல்லாம் தோன்றியதும் ஓரிருவர் அல்லராம்!
உங்கள் பகுத்தறிவை ஓட்டிவிட்டுக் கேளுங்கள்!
ஓரினமே தோன்றிற்றாம்! என்ன, உயிர் நூலறிவு!
ஓரிடமே வாயாய் இருந்துபிறக் கும்பொழுதே,
காற்றாய்ப் பறந்து கருக்குழியை மூடென்போம்,
ஊற்றுப் பெருக்காய் உடம்பெல்லாம் தோற்றமென்றால்
நாமென்ன செய்வோம்? நடுவணர சென்செய்யும்?
ஆமென்றால் சொல்லுங்கள்; அப்படியே விட்டிடுவோம்!

இன்னொன்றே செய்தி; எதுவென்று கேளுங்கள்.
அன்ன முகந்தோள் அடித்தொடை காலிலெல்லாம்
பெற்றுப் பிறப்பிப்ப தாரென்று பார்த்தீரா?
அற்றைப் பிரமன்தான்; ஆணாய்ப் பிறந்தவன்தான்!
தேவப் பிறவியிலே ஆண்,இத் திறம்படைத்தால்
தேவியரும் தாம்முனைந்தால்....! தீர்ந்த துலகெல்லாம்!
செவ்வாய் உலகம், நிலாவுலகம் எல்லாமும்
ஒவ்வுமிவ் வேலையாம் ஒன்றால் நிரம்பிவிடும்!

தார்வினது கொள்கையெல்லாம் ஓபாரின் கொள்கை யெலாம்
யார்நினைத்துப் பார்த்தார்கள்? யார்விரும்பி யேற்றார்கள்?
ஒப்புமா இந்த உலகமென்பீர்? ஒப்பியதே.
இப்பொழுது மா?. என்பீர். ஆமென்பேன்! என்ன சொல்வீர்
ஓரிரண்டு பொய்யையன்று; ஓரா யிரம்பொய்யை!
ஓரிரண்டு நாளன்று;நான்கா யிரமாண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/57&oldid=1447919" இலிருந்து மீள்விக்கப்பட்டது