பக்கம்:கனிச்சாறு 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


5. தமிழ் மேன்மையுற...!

(6.2.70இல் நடந்த மதுரைத் தியாகராசர் பொறியியற் கல்லூரி முத்தமிழ்
விழாப் பாட்டரங்கத் தலைமையுரை)

முன்னுரை:

தாய்மொழிமேல் பற்றும் தமிழ்நிலத்தின் மேல்பற்றும் வாய்மொழியாய் மட்டுமின்றி வல்ல வினைவழியும் காட்டிவரும் மாணவரீர்! கல்வி வளர்குலத்தீர்! ஊட்டிவரும் தாய்ப்பால் உணர்வால் உயர்ந்துவரும் நல்லிளைஞர் கூட்டமே! நாளைத் தமிழுலகே! அற்றைப் பிறப்பை, அனைத்துக்கும் தாயான ஒற்றைத் தமிழை, உலகத் தனிமுதலை இற்றைக்கும் நாளைக்கும் ஏந்துகின்ற தோள்களே!

“விற்றுண்ணற் கன்று; விளைத்துண்ணற் கேதமிழைப் பேணுவோம்; யாமும் பிழைத்திருப்போம்; வல்லுறுதி பூணுவோம்” என்றடிமைப் பூட்டறுக்கும் காளையரே!

“ஒட்டாத ‘சாதி’ப் பிரிவை உடைத்தெறிவோம்! வெட்டாத நம்பகையை வெட்டிச் சிதைத்திடுவோம்! பாவேந்தர் நற்கனவை, பாவாணர் எண்ணத்தைச் சாவேந்தி னாலும் சழக்கர் தடுத்தாலும் மெய்ப்பித்துக் காட்டுவோம்; மேலும் விளைவிப்போம்! பொய்ப்பித்துக் கொண்டன்று! புகழ்ப்பித்துக் கொண்டுரைப்போம்’ என்று முழக்கி எழுந்த களிறுகளே!

நின்று நிமிர்ந்தநடை நீட்டும் வரிப்புலிகாள்! கண்கள் அனலுமிழக் காட்டுகின்ற வல்லரிகாள்! “புண்களல்ல; வெற்றிப் புகழ்குறிக்கும் பூண்களிவை; செங்குருதி யன்று; செருக்களத்துச் சேறு” என்று வல்லமறம் கூறியொரு வாகைப்பண் பாடுகின்ற கொல்லேற்றுக் கூட்டமே! குன்றன்ன தோள்மறவீர்!

அன்றிருந்த முத்தமிழ்க்கே ஆன விழாவெடுத்தீர்; நின்றிருந்த தீமைகொல்ல நேரம் பிறந்ததுவோ? ஏற்றிருந்த பேரிழிவை எற்றும் பொழுதிதுவோ? வீற்றிருந்த நீள்பகையை வெட்டுகின்ற காலமிதோ?</poem>

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/56&oldid=1447918" இலிருந்து மீள்விக்கப்பட்டது