பக்கம்:கனிச்சாறு 8.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 41

நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுன் தோன்ற யாத்து அமைப் பதுவே”
- சாசர் காலத்து ஆங்கிலம் வேறு!
சாக்சா னியரின் ஆங்கிலம் வேறு.
சேக்சு பிரியரின் ஆங்கிலம் வேறு!
இக்கால் மொழிந்திடும் ஆங்கிலம் வேறு!
துளசி தாசர் எழுதிய இந்தியும்
வழங்கும் இந்தியும் வேறு வேறு!
ஆனால் தமிழில் அப்படி இல்லை.
மேனாள் எழுதிய புறப்பாட் டிதுவாம்!
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”
சொற்கள் எத்துணைத் தெளிவொடு தோன்றின.
இக்கா லத்துப் பாடல் போல
எத்துணை இளமையோ டுள்ளது பாடல்!
எனவே தமிழரீர்! இதுவரை ஆற்றுப்
புனலோட் டம்போல் தமிழ்நலம் பயின்றோம்.
இன்பத் தமிழின் எண்மைச் சிறப்பைத்
தம்பாத் திறமையால் பாவலர் தந்தனர்.
நம்மருந் தமிழை நாடிப் புகுந்தால்
செம்மைப் பண்பின் சிறப்புகள் தெளிவீர்!
மொழிநலம் ஒன்றே தமிழரின் முனைப்பாம்!
மொழிநலங் குன்றின் தமிழன் முடங்குவான்.
அறிவிய லுக்கென ஆங்கிலம் படிக்க!
நெறியெனும் வாழ்விற்குத் தமிழ்வழி நிற்கெனக்
கேட்டுக் கொள்ளுவ தோடு
பாட்டரங் கினையுமென் பாட்டையும் முடிப்பனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/55&oldid=1447917" இலிருந்து மீள்விக்கப்பட்டது