பக்கம்:கனிச்சாறு 8.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  47


ஏனோ ஒழுங்கில்லை; எப்படியோ வாழ்கின்றோம்!
மேற்புறத்தை வென்றோம்; அகப்புறத்தை வெல்லவில்லை!
நாற்புறத்தைக் கண்டோம்;நமதுளத்தைக் காணவில்லை
உள்ளந் திரிந்தும் உடல்திரிந்தும் வாழுகின்றோம்!
வெள்ளப் பெருக்கேபோல் வீணான நாகரிகம்!
ஊர்திகளின் ஓலங்கள். ஓசையெழும் கூட்டங்கள்!
நேர்கின்ற முன்னேற்றம் யாவும் நிழல்போல!
இல்லறத்துப் பாங்கில்லை; எங்கணுமே இன்பமில்லை!
சொல்வதற் கோஅச்சம்; செய்வதற்கோ பேரச்சம்!
காசுபணம் தந்தால் கயமை செயத்தயங்கார்!
பேசுவது வேறு! பிழைக்கும் வழிவேறே!
இந்த நிலையில் தொழிலாளர் என்செய்வார்?
தத்தம் மொழியன்றோ தம்மினத்தைக் கூட்டுவிக்கும்!
கூட்டுவிக்கப்பெற்ற இனத்தன்றோ கூடும் இன்பம்!
நாட்டின் நலமுழுதும் நாட்டாரே துய்ப்பதெனில்
அன்னவர்பால் நாமிங் கனைவோரும் ஒன்றென்னும்
பொன்னுணர்வு முற்படவும் பூத்துவரல் வேண்டாவோ!

தாய்மொழியொன் றன்றோ தமையிணைத்துக் கட்டுவது!
தாய்மொழியைத் தள்ளுவது தாய்மை தவிர்ப்பதுவே!
இற்றைத் தொழிலாளர் இஃதுணர்ந்தால் செந்தமிழும்
அற்றைப் பொலிவை அடைந்து சிறக்காதோ?
ஊர்க்காக்கும் நல்லுழவர் வாழ்க்கையிலும் ஒண்தமிழே
சீர்காக்கும்! அன்புச் செறிவை உணர்த்துவிக்கும்!
பண்டைத் தமிழில் உழவுப் பயன்மிகுதி!
கெண்டை புரளும் வயலில் கிடந்துழலும்
பெண்டிர்தம் பாட்டால் பெறும்விளைவு கோடிபெறும்!
கண்டன்ன தென்பாங்கு காற்றில் மிதந்துவரின்
ஏற்றம் இறைப்போர் இடுப்புவலி போகாதா?
மாற்றம் இருந்தால் மனமகிழ்ச்சி கூடாதா?
மக்கள் உழவில் மனம்புகுதல் இன்றில்லை!
ஒக்க தமிழென் உணர்ச்சி தளர்ந்ததுவே!
தக்கபடி அன்னார் தமிழில் உணர்வுபெறில்
மிக்க பயனிருக்கும்! மேன்மை யுறுந்தமிழும்!
தாய்தமிழைப் பேணுவது தாயர் கடனாகும்!
வாய்வைத்தே யுண்ணும் வளர்குழவிக் கின்னமுதோ
டெந்தமிழை ஊட்டுவதே எப்பணிக்கும் மேற்பணியாம்!
செந்தமிழின் சொற்கள் செழுந்தாய்மைச் சொற்களன்றோ?
பெற்றுயிர்க்கும் மக்களிடைப் பெற்றி குலைவதெலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/61&oldid=1447923" இலிருந்து மீள்விக்கப்பட்டது