பக்கம்:கனிச்சாறு 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


வெற்றொலியாய் வேறுமொழி வேண்டிப் பயிற்றுவதே!
தாய்மை உயர்ந்ததெனில் தாய்மொழியும் தாழ்ந்திடுமோ?
தாய்ப்பால் தவிர்த்தொருதாய் தன்குழவி வாயிலொரு
நாய்ப்பால் புகட்டியதை நாள்தோறும் பேணட்டும்!
தாயுடலின் மேலாகத் தன்னுடலைக் கண்டாலும்,
நற்றாய் குணம்வருமா? நாயின் குணம்வருமா?
கற்றார்கள் ஆய்ந்து கருத்தைத் தெரிவியுங்கள்!
ஆகவே தாய்மாரை அன்பாலே வேண்டுகின்றேன்.
வேக உலகின் விழல்நா கரிகத்தை
மேலென்றே எண்ணற்க! மேன்மையுறச் செந்தமிழ்த்தாய்ப்
பாலைப் புகட்டுக! பைந்தமிழைக் காத்திடுக!
பேசும் மொழிக்கன்று, பேசாத எத்துறைக்கும்
மாசு விலக்கி மலர்ச்சியுறச் செய்வதெலாம்
நல்லரசின் மெய்க்கடனாம்! நாட்டு வரலாற்றில்
வல்ல மொழிவளர்க்கா வல்லரசு வாய்த்ததுண்டா?
தாய்மொழியிற் கல்வி தருகின்ற எவ்வரசும்
ஆயமிக நல்லரசாய் மக்கள் அகப்படுக்கும்!
செந்தமிழின் மேன்மை செழிப்பதெனில் நம்மரசும்
எந்தமிழைப் பல்துறைக்கும் ஏற்றுக் கொளல்வேண்டும்!

பல்துறையில் நூலெழுதும் பன்னூல் அறிஞர்க்கும்
ஒல்லும் வகையில் உதவிதந்தே, அந்நூற்கள்
எல்லாமும் அச்சேற்றி யாவருக்கும் போக்குவிக்கும்
நல்லறத்தைச் செய்தற்கு நாட்ட முறல்வேண்டும்!
எத்துறையில் யாவர் இறங்கியுழைக் கின்றனரோ
அத்துறையில் அன்னார் அறிவுரைகள் மேற்கொண்டு
நல்லபடி ஆய்ந்து நடுநின்று பின்பற்றி
மெல்லப் படிப்படியாய்ச் செந்தமிழை மேலேற்றல்
தம்மின் கடனாய்த் தமிழ்அரசு கொண்டிடுமேல்
எம்மருங்கும் நற்பண் பெளிதே இலங்குமென்பேன்!
எம்மொழிக்கும் தம்மொழியில் ஏற்ற மொழிநூற்கள்
செம்மையாய்ச் செய்வித்தல் ஆளுநர்க்குச் செய்கடனாம்!
செந்தமிழ்க்கும் அன்ன சிறப்பிழைத்தல் மேன்மை யன்றோ?
எந்தமிழ நல்லரசும் இத்துறையில் எண்ணிடுக!
பாவலர்கள் செந்தமிழில் பாடல் குவித்திடுக!
தூவல் எடுத்தெதையும் தூவிவிடல் பாட்டாகா!
தந்தம் உணர்வுக்குத் தக்கதெல்லாம் பாட்டென்றால்
இந்த உலகில் இலக்கியமென் றொன்றேது?
மூட்டை சுமைக்கும் முழுக் கழுதை நெட்டுயிர்ப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/62&oldid=1447924" இலிருந்து மீள்விக்கப்பட்டது