பக்கம்:கனிச்சாறு 8.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  49


சாட்டையடி தாளாத சண்டிக் குதிரையதும்,
கல்பட்ட நாயின் கடிந்த குரைப்பொலியும்,
வில்பட்ட வேங்கை வெருவுதலும் பாட்டன்றோ?
வேற்று மொழிவிலக்கி, வெல்லுகின்ற சொல்லடுக்கி
நாற்று நடுதல்போல் நல்யாப்பில் கட்டுவிக்கும்
பாட்டன்றோ பாட்டு! பயன்விளைக்கும் மெய்ப்பாட்டு!
தீட்டுதீட் டென்று திசைபோன பக்கமெல்லாம்
போவதுபோல் கல்லாப் புரைதமிழை வைத்தடுக்கி,
ஆவதா கட்டுமென அல்லாரும் பட்டுரைத்தால்,
தெய்வத் திருக்குறளும் வல்லதிரு மந்திரமும்
செய்யரிதாம் சாத்தன் சிலம்பும்நன் மேகலையும்,
பாட்டுந் தொகையும் பயனுள்ள நூற்பிறவும்
நாட்டில் உலாவருமா? நல்லோர்கள் எண்ணிடுக!
பைந்தமிழில் வல்லாரே பாட்டியற்ற எண்ணிடுக!
உயர்ந்த பிறரோ உரைநூல் வரைந்திடுக!
பாடித் தமிழுயர்த்த எண்ணுகின்ற பாவலர்கள்
நாடித் தமிழ்கற்க! நல்லறிவு பெற்றிடுக!
நல்ல தொருகருத்தை நல்லமொழி, நல்லநடை,
நல்ல முறைப்பாவால் நாட்டுவித்தல் பாட்டாகும்!
செந்தமிழும் பாவலரால் சீர்பெறுதல் வேண்டுமெனில்
சந்தப்பா மட்டுமன்று; சாற்ற விரும்புகின்ற
எந்தப்பா வானாலும் ஏதுந்தப் பாவகையில்
சொந்தப்பா வாகச்சொற் சோர்வின்றிச் செய்திடுக!
முந்தப்பா வில்சிலசொல் மூலப்பா வில்சிலசொல்
கந்தப்பா வில்சிலசொல் காட்டிப்பா பாரென்றே
எந்தப்பா சொன்னாலும் ஏலாதப் பாவென்பேன்!
இந்தப்பா தோன்றுவதால் எந்தமிழ்ப்பா வாழாதே!
ஆகவே மாணவரும் ஆசிரிய நல்லாரும்
வாகாய்த் தொழில்புரியும் வன்மை மறவோரும்,
ஏருழவர் யாவரும் எந்தாய் மகளிரும்
ஆர்கொடி தாங்கும் அரசரும் பாவலரும்
செந்தமிழும் மேன்மையுறச் செய்க; பணி செய்கவென்றே
இந்த வுரைமுடிப்பேன் ஈண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/63&oldid=1447925" இலிருந்து மீள்விக்கப்பட்டது