பக்கம்:கனிச்சாறு 8.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  65

பள்ளிப் பிள்ளையின் பச்சை மனத்தைத்
தெள்ளத் தெளிவாய்த் தெரிந்திருந் தாலன்றி
இப்படி எழுதிட இயலுமோ புலவர்க்கே!
அப்படியே கன்னியின் மனத்தை அறிந்தவர்!

‘நான்குபக்கமும் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான்போல் - இங்
கேன் பிறந்தேன் இவர்கள் வீட்டில்
கரையி லிட்டதோர் மீன்போல்!’

‘நூறுமுறை அவள்பார்த்தாள், அவனை! ஆளன்
நூறுமுறை நோக்கினான். இனிது பெற்ற
பேறுதனை இழப்பாள்போல் குறட்டினின்று
பெயர்த்தஅடி கீழ்ப்படியில் வைக்குமுன்னர்
ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!

அவன்வண்டிப் படிமிதித்தான் திரும்பிப் பார்த்தான்!


இளைஞனின் இளைஞையின் இனிய மனங்களைக்
களைந்திடா வண்ணம் கையகப் படுத்திடும்
பெருந்திறன் பாவேந்தர் பிறப்பிலே முகிழ்த்தது!
அருந்திறன் பிறர்க்கே! அடுத்தது பாருங்கள்!

“நகைமுத்தை விரும்பு கின்றேன்;
நாளைக்கே மணக்க வேண்டும்!
வகைசெய்க அப்பா’ வென்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய்! உன்பெற் றோர்பால்
நீசொன்னா லென்ன வென்றான்.”

‘மகளுக்கு நாண மில்லை

என்பார்கள் மாட்டேன்’ என்றாள்


இதைவிட மணக்கப் போகும்
இருவரின் மனத்தும் உள்ளே
புதைந்துள கருத்தை யார்தாம்
புகன்றிட வல்லார்? மற்றார்
கதைவிடு வார்கள்; நெஞ்சக்
கருத்தினை உணர மாட்டார்!
எதைவிட? எதைநான் சொல்ல?
இன்னொன்று, மணந்தோர் காதல்!

‘தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை!

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான்.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/79&oldid=1448045" இலிருந்து மீள்விக்கப்பட்டது