பக்கம்:கனிச்சாறு 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


எத்துணை நயமாய் எடுத்துச் சொல்கிறார்!
பித்தனைப் போலப் பிதற்றவா வேண்டும்?
சமையல் செய்யும் குடும்பப் பெண்ணின்
அமைவான மனத்தை அளந்து தருகிறார்.

“கொண்டவர்க் கெதுபி டிக்கும்?
குழந்தைகள் எதைவி ரும்பும்?
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன?
உண்பதில் எவரு டம்புக்
கெதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள்; கறிகள் தோறும்

உண்பவர் தம்மைக் கண்டாள்!’


கன்னித் துடிப்பையும், கணவனை மணந்த
பெண்ணின் துடிப்பையும் பிரித்துப் பேசியோர்,
ஊருக்குச் சென்றான் ஊர்வரக் கண்டதும்,
மோருக்குள் சிலிர்க்கும் மத்தென உணர்ச்சிகள்
கொப்ப ளித்தன! ஆயினும் மாமியார்
செப்பும் பகடிக்கு உள்ளம் நாணி
ஒப்பனை செய்வதும் உலாவரத் திரிவதும்
செப்பமாய்ச் செய்யும் மருமகள் செயல்களை
ஊன்றி நோக்கி உரைப்பதைக் கேளுங்கள்:

‘தென்றல் அடிக்கையில் பச்சிளங் கீற்றுச்
சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல் போல்
இன்றைக்கு நீகொண்ட பூரிப்பின் காரணம்
என்னடி மின்னல் இடைச் சிறுக்கி?
நின்றஉன் கால்கள் நிலைக்கவில்லை; கடல்
நீராய் நெளிந்தது பொன்னுடலும்!
அன்றைக்குச் சென்றவன் என் மகன் வீட்டை
அடைந்த மகிழ்ச்சித் திருக்கூத்தோ?’

‘மாற்றியணிவதும் சேலையினை, மலர்
வாங்கி யணிவதும் கூந்தலிலே, ஒரு
காற்றென ஓடிச் சிரிக்கும் முகத்துக்குக்
கண்ணாடி காட்டிப்பின் மீளுவதும்'
நேற்றில்லையே! இன்று பூரிப்ப தென்னடி
நீள்புருவத்து நிலாப் பிறைச்சி?
வேற்றூர்க்குச் சென்றவன் என்மகன் வீட்டுக்கு

மீண்ட மகிழ்ச்சித் திருக்கூத்தோ?’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/80&oldid=1448047" இலிருந்து மீள்விக்கப்பட்டது