பக்கம்:கனிச்சாறு 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘அறம்பெய்த கையும் ஓயும்;
மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்;
செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறங்கேட்ட காதும் ஓயும்!
செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்

மனம்மட்டும் ஓய்தல் இல்லை!’


மறவனைச் சுமக்குமாம் மங்கையின் முதியவுள்ளம்!
மனம்மட்டும் ஓயாதாம்;! புலவரின் மனவியல்
எத்தகு சிறப்பாய் இருந்தது பாருங்கள்!
மெத்தவும் சிறப்பாய் மேலும் உரைக்கிறார்!

‘அருகரு கிருவர்; மிக்க

அன்புண்டு, செயலே இல்லை!’


இரண்டே அடிகளில் முதுமையின் இன்பம்
திரண்டு வெளிப்படல் புலமையின் திறமே!
அடுத்தது பாவலர் மொழித்திறன்; அதனையும்
எடுத்துச் சொல்வேன்;! இருந்து கேளுங்கள்:
புலவர் ஒருவர் புகன்ற சொற்களின்
வளத்தை யறிந்தால் மொழித்திறன் உணரலாம்!
பாவேந் தர்க்குப் பழந்தமிழ்ப் பயிற்சியின்
ஈவாய் அமைந்தது சொல்திறன்! இதோ! ஒன்று

‘நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி
காலையில்படி! கடும்பகல்படி!
மாலையிரவு பொருள்படும்படி நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி - முறைப்படி
கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி.
கற்கத்தான் வேண்டுமப்படி!
கல்லாதவர் வாழ்வதெப்படி - நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி - முறைப்படி
அறம்படி - பொருளைப்படி - அப்படியே இன்பம்படி
இறந்ததமிழ் நான்மறை
பிறந்ததென்று சொல்லும்படி - நூலைப்படி - சங்கத்தமிழ்
                                                 நூலைப்படி முறைப்படி
தொடங்கையில் வருந்தும்படி - இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி - நூலைப்படி சங்கத்தமிழ்

                                                 நூலைப்படி- முறைப்படி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/82&oldid=1448049" இலிருந்து மீள்விக்கப்பட்டது