பக்கம்:கனிச்சாறு 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 73


என்று பொதுமை உலகம் புனைய விரும்பினார்!

‘மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி, மேலே ஏற்று’
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!
உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்!
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும்! பேத மில்லை!
உலகம் உண்ணஉண்; உடுத்த உடுப்பாய்!
புகல்வேன் உடைமை மக்களுக் குப்பொது;

புவியை நடத்து பொதுவில் நடத்து!’


எத்துணை எழுச்சி; எத்துணை உயர்ச்சி!
எத்துணை விரிந்த எண்ணக் குவியல்!
சடசட சடவெனச் சொற்கள் ஆட்சி!
மடமட மடவெனும் கருத்து மாமழை!
உணர்வு மின்னல்; உருட்டும் இடிகள்?
இதைவிடப் பொதுமை என்ன வேண்டும்?
புதுக்கருத் தெவர்தாம் புகன்றிடப் போவார்?
வெறுப்பிலா திருந்து பொதுமையாய் விளக்கினால்
மறுப்பிலா தவரை மாப்புல வோனாய்
ஏற்றுக் கொள்ளுவார்; இல்லெனின் தூற்றுவார்!
மாற்றுக் கொள்கையர் மறுத்திட முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/87&oldid=1448083" இலிருந்து மீள்விக்கப்பட்டது