பக்கம்:கனிச்சாறு 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்

தூய்தமிழ் பிதற்றும் என்வாய்’


என்று, தமிழும் தாமுமாய்
ஒன்றிக் கிடந்தார்; உயிரொடு பொருத்தினார்.
அந்தத் தமிழே அவரையும் உயர்த்தி
இந்த நாட்டையும் இனிதுயர்த் துவது!
இவர்க்குத் தமிழ்மேல் எத்துணை ஆவலோ
அத்துணை அக்கறை தொழிலா ளர்மேல்!

‘குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி

வசங்கெட்டுப் போனது நமதுநன் னாடு!’


என்றவர் கூறுதல் எவ்வகை யில்பிழை?

‘சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் . ஆறு
தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?’


என்றஅவர் கேள்வி ஏற்றதோர் கேள்வியே!

தமிழ்க்கவர் தந்த தாழாத உழைப்பும்
தொழிலா ளர்க்கவர் தோள்தந்த மாண்பும்
பாரதி தாசனைப் பாவேந்தர் ஆக்கிப்
பாரறி யும்படி பண்ணி வைத்தன!

இத்தகு புலவர்போல் எந்தமிழ் மொழியிலோர்
ஒத்த புலவரை உணர்ந்திட வில்லை!’
வீரமும் தமிழும் வியத்தகு புலமையும்
ஈரமும் ஏழைமேல் இரக்கமும் சேர்ந்தால்
பாரதி தாசனென் பாவலர் தெரிவார்!
ஊரதி ர,அவர் ஒண்புகழ் வாழ்கவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/90&oldid=1448089" இலிருந்து மீள்விக்கப்பட்டது