பக்கம்:கனிச்சாறு 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81


அப்போதும் அப்படியே ஆட்டத்தின் காட்சிவரும்!
எப்போதும் போல்,பின் இறுதித் திரையிறங்கும்!

இப்படியோர் நல்லுலகம்! இங்கிருக்கும் மாணவரை
அப்படிநான் சொல்லவில்லை! ஆனாலும் சொல்லுகின்றேன்!
சொல்லுக்குச் சொல்லவில்லை; உண்மைக்குச் சொல்லுகின்றேன்!
மல்லுக்கா இங்குவந்தோம்? மற்றெதற்கு வந்தோம், நாம்?
வாழ்க்கைக்கிங் கேதான் வழியமைக்கப் பட்டிருக்கும்!
பூழ்க்கை விழைவிற்கும் இங்கேதான் போக்கமையும்!
நன்றாக எண்ணுங்கள்; நானுரைப்ப துங்களுக்கே!
ஒன்றும் கருத்தென்றால் - உண்மையென்றால் ஒப்புங்கள்!
கொள்ளத் தகுந்ததெனில் கொள்ளுங்கள்; குப்பையிலே
தள்ளத் தகுந்ததெனில் தள்ளுங்கள்; தாழ்வில்லை!
தோற்றம் முதலாத் தொடர்ந்திருக்கும் நல்லொழுக்கம்;
ஆற்றலுடல், அன்புமனம், அன்றாடம் கல்விநலம்,
போற்றற் குரிய புகழ்தற்குத் தானுரிய
ஏற்றஞ்சேர் வாழ்க்கைக்(கு) எழுதுமொரு முன்னுரையாய்
மாணாக்கர் வாழ்க்கையொரு மாண்புலக வாழ்க்கை யென்பேன்;
வீணாக்க வேண்டாவென் றன்னவரை வேண்டுகிறேன்!
இக்கால மாணாக்கர் தோற்றத்தை என்னுரைப்பேன்?
முக்கால் முகத்தைவந்து மூடுகின்ற தொங்குமயிர்!
அந்த மயிர்ச்சுமைக்குக் கால்கள் அமைந்தன போல்
வந்திறங்கித் தாடைவரை வாய்ந்திருக்கும் கன்னமயிர்!
பல்வண்ணச் சட்டை! பருத்த தொடையிரண்டை
நல்வண்ண மாயெடுத்து நன்றாய்ப் புறங்காட்டும்
காற்சட்டை! போட்டுக் கழற்ற அரை நாளாகும்!
மேற்சட்டை பெண்களுடை போல மினுமினுக்கும்!
உள்ளக் கவர்ச்சிபோய் ஊனின் தசைக்கவர்ச்சி
எள்ளும் வகையாய் இருப்பதனைக் காண்கின்றோம்!

கற்கின்ற பொத்தகங்கள் தம்மிடையில் காசடிக்கச்
சொற்குன்று மாறுபல சோம்பல் எழுத்தாளர்
பாலியலைத் தூண்டிப் பணம்பறிக்கத் தாமெழுதும்
‘காலிப்பயல்’ - என்னும் [1]கௌபாய்’ வெளியீடு!


  1. (Cow Boy: Cow: காலி (ஆ) Boy: பையல் (பையன்) *மேனாடுகளில் மாடு குதிரை மேய்ப்பவர்கள் அணியும் உடை, பழகும் முறை இவற்றை அடிப்படையாகக்
    கொண்ட அரையம்மண வெளியீடுகள்!)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/95&oldid=1448106" இலிருந்து மீள்விக்கப்பட்டது