உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

அவர்கள் மீது ஏவி விட்டான். ஆங்கிலேயப் படைகளும், அவன் ஆணைப்படி புதுச்சேரியை முற்றுகையிட்டன. ஆங்கிலேயர் வீரத்தை விட, ஹைதரின் வீரத்துக்கே இது வரை பிரஞ்சுக்காரர் அஞ்சியிருந்தனர். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் ஹைதர் உதவியை நாடினர். தமக்கு ஆதரவு தந்தால், அதற்கு மாறாக, செஞ்சியையும் தியாக நகரையும் மைசூருக்கு அளிப்பதாக வாக்களித்தனர்.

ஹைதர் தன் படைகளின் பெரும் பகுதியை சையத் மக்தூம், அசூத் கான், மகூரி நாயுடு ஆகிய படை முதல்வர்களின் தலைமையில் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தான். மக்தூம் கான், பார்மால் வட்டம்—அதாவது தென் ஆர்க்காட்டின் ஒரு பகுதியை—வென்று, அதை அசூத் கானின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் புதுச்சேரி சென்றான். முற்றுகை வளையம் கடந்து, கோட்டைக் காவல் வீரருக்கு, அவன் உதவியும், ஊக்கமும் அளித்தான். ஆனால் முற்றுகை தகர்ந்து விடவில்லை. மைசூர் வீரரே, கோட்டையைக் காத்து வந்தனர்.

புதுச்சேரி நடவடிக்கை காரணமாக, ஹைதரிடம் இப்போது ஒன்றிரண்டு படைப் பிரிவுகளே இருந்தன. ஆயினும், குந்தி ராவின் போக்குகளில் சிறிது ஐயத்துக்கு இடமிருப்பதாக ஹைதர் காணத் தொடங்கியதிலிருந்து, அவன் தன் குடும்பத்தினரைப் பாதுகாக்க, ஒரு ‘படை காவல் அரண்’ அமைத்துக் கொண்டிருந்தான். சின்னாட்களுக்குள், குந்தி ராவின் பகைமை வெளிப்படையாயிற்று. அவன் வேண்டுகோளுக்கிணங்கி, புதிய பேஷ்வாவான மாதவ ராவ், ஈசாஜி பண்டிட் என்ற படைத் தலைவனை அனுப்பினான். அவனுடன், நாற்பதினாயிரம் குதிரை வீரரும், இருபதினாயிரம் காலாள் வீரரும் வந்து சேர்ந்தனர். அந்த விநாடியே, குந்தி ராவ் ஹைதரின் அரணை வளைத்துக் கொண்டு, பீரங்கிக் குண்டுகளை அதன் வாயில் நோக்கிப் பொழிய வைத்தான்.