உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிலன் வீழ்ச்சி

47

ஹைதர் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளில் முதன்மையானது இதுவே. படை வலு இல்லாத இந்த நேரத்திலும், அவன் வீரப் படைத் திறம் சிறிதும் தளரவில்லை. தன் பீரங்கிகளைத் தற்காலிகப் பாதுகாப்பில் ஈடுபடுத்தி, அவன் எதிரியின் தாக்குதலுக்கு எதிர் தாக்குச் செய்தான். அதே சமயம், அவன் குந்தி ராவின் சூழ்ச்சிப் பொறியிலிருந்து தப்பும் திட்டங்களிலும் முனைந்தான்.

உடனே திரும்பி வரும்படி அவன் மக்தூமூக்கு ஆணை பிறப்பித்தான். தன் சட்டகனான மீர் அலி ரஸா கானுக்கும், விரைந்து வரும்படி அழைப்பனுப்பினான். அவர்கள் திரும்பி வரும் வரையில் காத்திருக்காமல், அவன் தன் பணித் துறைச் செல்வங்களனைத்தையும் தொகுத்து, அவற்றிற்கான கணக்குத் தயாரித்துக் கொண்டான். ஒரு சிறு படையை அனுப்பி, யாரும் அறியாமல் அரணை அடுத்திருந்த ஆற்றின் படகுகளையும், படகுக்காரர்களையும் பிடித்து அடைத்து வைத்தான். நள்ளிரவில் தன் அரும் பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் இரவோடிரவாக ஆற்றைக் கடந்து, காற்று வேகமான குதிரையில் ஏறி, எதிரியின் வலையிலிருந்து தப்பியோடினான்.

தன் அவசரத் தேவைகளை எண்ணி, ஹைதர் திடுமெனப் பங்களூர் கோட்டையுள் நுழைந்து, அதைக் கை வசப்படுத்திக் கொண்டான். அதன் தலைவன் கபீர் பேகும், நகரின் வணிகச் செல்வரும், அவன் துணிகர வீரங்கண்டு, அவனை ஆதரிக்க முன் வந்தனர். அவர்களிடம் பண உதவி பெற்றுக் குடும்பத்தை, அவர்கள் பாதுகாப்பில் விட்ட பின், அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான்.

குந்தி ராவும், மராட்டியரும் பங்களூரை முற்றுகையிட்டனர். இச்சமயம் மக்தூம் சாகிபு, ஹைதரின் ஆணைக்கிணங்கிப் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டான். வழியில்