உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

அசூத் கானிடமிருந்து படைக்கலங்களும், உணவுப் பொருள்களும் பெற்று, ஹைதரை நோக்கி வந்தான். மராட்டியரும், குந்தி ராவும் பங்களூர் முற்றுகையை விட்டு விட்டு, ஆனைக்கல் என்னுமிடத்தில் அவனைச் சூழ்ந்தனர். மக்தூம் தன் நிலையையும், படைக்கலமும், உணவும் கொண்டு வந்தும், அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் இக்கட்டையும் தெரிவித்து, ஹைதருக்குக் கடிதம் வரைந்தான்.

ஹைதர் தங்க இடமின்றி, தன் துணைவர் இடர் தீர்க்க வகையின்றி, காடுமேடாக அலைந்து வந்தான். அவனுக்கு இச்சமயம் தன் பழைய நண்பனும், தலைவனுமான நஞ்சி ராவின் நினைவு இருளில் ஒளியாக மின்னிட்டது. இருவரிடையேயுள்ள நட்பு அணிமையில் முறிவுற்றிருந்தது. ஆனால், நஞ்சி ராவின் பெருந்தன்மையிலும், நன்றியுணர்விலும் ஹைதருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. குந்தி ராவின் சூழ்ச்சியில், தான் விழுந்ததற்கு மன்னிப்புக் கோரி, அதே சூழ்ச்சியில் சிக்கித் தான் அடைந்த நிலையையும் விளக்கி, அவன் நஞ்சிராவுக்கு முடங்கல் வரைந்தான்.

“நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
 சீரொழுகு சான்றோர் சினம்.”

என்ற மூதுரை, நஞ்சி ராவ் வகையில் பொய்க்கவில்லை. அவன் ஹைதரைக் கை தூக்கி விட ஆர்வத்துடன் முன் வந்தான். அத்துடன் இடரில் சிக்கிய ஹைதரின் தோழன் மக்தூமுக்கு உதவும்படி, தன் வசமிருந்த அஞ்சிடி துருக்கத் தலைவனுக்கு அவன் ஆணை பிறப்பித்தான்.

அஞ்சிடி துருக்கத்தின் ஆதரவிலிருந்து கொண்டு மக்தூம், எதிரிகளை விரைவில் எதிர்த்துத் துரத்த முடிந்தது. அவன் வீரர்கள் இரவில் எதிரி முகாம்களைப் பின்னிருந்து தாக்கி, அவர்கள் படைகளைச் சிதறடித்தனர். நரியுடன் சேர்ந்த