உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வெற்றிப் பாதை

ரத்திஹள்ளி என்ற இடத்தில், ஒரு கடும் போர் நிகழ்ந்தது. ஹைதர் போர் முறைகள் பலவற்றைத் திறம்படக் கையாண்டும், மராட்டியர் பெரும் படை முன் முழுத் தோல்வி ஏற்க வேண்டியதாயிற்று. ஒரு சில குதிரை வீரருடன் பேடனூர்க் காடுகளுக்குள் ஓடித்தான் ஹைதர் உயிர் தப்ப வேண்டியிருந்தது.

மராட்டியப் படைகள் மைசூர்ப் பகுதி முழுவதும் பரவி, ஹைதரை மென்மேலும் நெருக்கின. குடும்பத்தையும், குடும்பச் செல்வக் குவியலையும் சீரங்கப் பட்டணத்துக்கு அனுப்பி விட்டு, ஹைதர் நேர் உடன்படிக்கை கோரினான். இந்த ஒரு தடவை உடன்படிக்கையின் கட்டுப்பாடுகள் அவனுக்கு முற்றிலும் பாதகமாய் இருந்தன. அவன் சாவனூரையும், மொராரி ராவிடமிருந்து முன்பு கைப்பற்றிய குத்திப் பகுதியையும் விட்டுக் கொடுக்க இணக்கமளித்தான். அத்துடன், போர் இழப்பீடாக 32 இலட்சம் வெள்ளி கொடுக்க வேண்டி வந்தது. ஆயினும், ஹைதரின் சுரா மாகாண வெற்றியும், பிற ஆட்சிப் பகுதிகளும் அவனிடமே விட்டு வைக்கப்பட்டன. தோல்வி இடையேயும், அவன் வீரத்துக்குக் கிடைத்த மதிப்பே இது.

தோல்வி காணாத வீரன் ஹைதரின் புகழ், மராட்டியப் போரின் தோல்வியால் வளர்ந்ததேயன்றிக் குறையவில்லை. ஏனென்றால், இத் தோல்வி, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்கான ஒரு பதுங்கலாக மட்டுமே அமைந்தது. படைகளின் அளவால், பன்மடங்கு மேம்பட்ட எதிரி, முகம் திரும்பிய மறு கணமே ஹைதர் விரைந்து, தன் நாட்டைச் சீர் செய்து கொண்டு, அடுத்த வெற்றிப் பாய்ச்சலுக்குக் கிளம்பினான். இத்தடவை அவன் நாட்டம் மேற்கு மலையாளக் கரை நோக்கிற்று.

மேற்குக் கரைப் பகுதி கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை, முத்தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேர நாடாயிருந்தது.ஆனால்,