பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

21

கண்டு வாடாதவன்; அதிகாரபலத்துக்காக வளையாதவன்! அவன்தான் நேர்மையான மனிதன்.

நீதி, நேர்மை, கன்னியம், கடமை, கட்டுப்பாடு; ஆசார விதிகள் தவறாமை; எக்காரியத்தையும் தனது திறமையினாலேயே செய்து முடிக்கும் துடிப்பானவன்; இவன்தான் நேர்மையாளன்.

உலகம் போற்றும் பண்பாளன்; பழுத்த பண்புகளைச் சுவைப்பவன்; தனது நல்லியல்புகளைத் தலையாகக் கருதுபவன்; இவன்தான் நேர்மைக்குரிய நெஞ்சினன்.

உதவியே குறிக்கோளாகக் கருதுபவன் அற்பன்; அடுத்தவரை ஆள்காட்டியே வாழ்பவன் அற்பன்; குற்றேவல் செய்தே குறைகூறி வாழ்பவன் அற்பன்; பிறர் தயவை நம்பியே கையேந்தி பிழைப்பவன் அற்பன்; இவன் கெளரவம் உள்ள நேர்மையாளனின் பரம விரோதி!

நீதிநெறி எங்கும் நிறைந்து தோற்றமளிப்பதைச் சாதாரண மக்களால் புரிந்து கொள்வது மிகக்கடினம்; கடவுளால் அளிக்கப்பட்டதைக் கூட மனித இயல்பு என்று கூறிவிடுகின்றோம். அந்த மனித இயல்பின் கடமையை நிறைவேற்ற உதவுவதைத்தான் நீதிநெறி என்கிறோம். அந்த நீதிநெறிகளின்படி நடப்பதைத்தான் நாம் பண்பாடு என்று போற்றுகிறோம்.

உண்மையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கவலை இல்லை; அறிவுடையவனுக்குத் தயக்கம் இல்லை; உள்ளத் துணிவுடையவனுக்கு நெஞ்சில் அச்சம் இருக்கயிடமில்லை.

நேர்மையை அறிந்தவனை விட, அதை விரும்புபவன் சிறந்தவன்; அதை விரும்புபவனைவிட கடைப்பிடித்து மகிழ்ச்சி பெறுபவன் தலை சிறந்தவன்; மிகவும் உயர்ந்த நிலை மனப்பண்பும், மிகத் தாழ்வான நிலையில் உள்ள மனப் பண்பும் என்றுமே மாறுவது இல்லை.