பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

59

இருந்தேன். அதனால்தான் எதையும் சமாளித்துப் பல்திறப்பட்ட விஷயங்களிலும் என்னால் திறமைபெற முடிந்தது, என்று கன்பூசியசே கூறுகிறார் என்றால், நாம் எப்படி இருந்தாக வேண்டும் என்பதற்கோர் எச்சரிக்கை அல்லவா இது?

கன்பூசியசின் பல்துறை கல்வித் திறமை அவரைத் தனது பதினேழாவது வயதிலேயே குருகுல ஆசானாக மாற்றி விட்டது. மாற்றிற்று என்றால் அந்நகரத்துச் சான்றோர்கள் எல்லாம், மரணத் தருவாயில் உள்ள முதியோர்கள் எல்லாம், அவரவர் வாரிசுகளை, கன்பூசியசிடம் படிக்கப் போங்கள் என்று வலிந்து-வற்புறுத்தி அவரது குருகுலத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்றால், எப்படி இருந்திருக்கும் கன்பூசியசின் போதனாமுறை அறிவுத் திறம்? சற்றே எண்ணிப் பார்ப்பவர்களுக்குத் தான் இந்த 17 வயதின் ஞானப்பழ அருமையைச் சுவைக்க முடியும்.

பத்தொன்பதாம் வயதில் அவருக்குத் திருமணமானது; ஒரே மகன்; இரு பெண்கள்; இதனால் குடும்ப பந்தம்; இருப்பினும் பழுத்த அறிவாளியாக மட்டுமல்லாமல் சிறந்த ஆட்சியாளனாகவும் மாறவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்தது!

கலைக்கழகம் என்ற ஒரு கல்விக் கோட்டத்தைத் தனது 22-ம் வயதில் துவக்கினார்! மனிதனின் மனப் பண்பு எப்படி அமைய வேண்டும்; எப்படி அவனுக்குப் பழக்க வழக்கங்களை உருவாக்கிட வேண்டும்; வாழ்க்கை முறை, ஆட்சி முறை முதலான வகைகளை எல்லாம் துறைதோறும் விளக்கிக்கூறும் கலைக்கழகமாக அவர் குருகுலம் இருந்ததால், கன்பூசியஸ் கல்வி ஞானத்தைத் தேடி-நாடி சீன நாட்டு மாணவர்கள் திரண்டு வந்து சேர்ந்தார்கள் பயன் பெற்றார்கள்!