பக்கம்:கபாடபுரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கபாடபுரம்


சிந்திக்க வேண்டும் இளையபாண்டியரே!" என்று காதில் வந்து இழையும் நெய்தற்பண்ணை இரசிக்க முடியாமல் உடன் பேசிக்கொண்டே வந்த முடிநாகனின் பேச்சு சாரகுமாரனுக்கு வெறுப்பூட்டினாலும் கேட்டுத் தீர வேண்டியிருந்தது.

சிகண்டியாரிடம் இசைக்கலையின் மிக உரிய நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்தவனும், அந்தக் கலையை உயிரினும் மேலானதாக மதிப்பவனும் ஆகிய சாரகுமாரனோ நெய்தற் பண்ணை இதுவரை வேறெவரும் இத்தனை நெஞ்சுருகப் பாடிக் கேட்டதில்லை. நேரம் வேறு பொருத்தமாக அமைந்து விட்டது. அதனாலும் அந்த இசையின் மதிப்புப் பன்மடங்காகப் பெருகிவிட்டது. அருகில் நெருங்க நெருங்க அவனுடைய சந்தேகத்துக்குத் தெளிவு கிடைப்பதுபோல் அந்தக் குரல் அவளுடையது என்றே தெரிந்தது. இனிமையின் நீரொழுக்குப்போன்ற இடையறாத அந்தச் சொல் மதுரம் அவளுக்கே சொந்தமானதல்லவா? இடமும் பாணர்கள் தங்கியிருந்த புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியாயிருக்கவே அவன் தன் அதுமானத்தில் அதிக நம்பிக்கைகொள்ள வாய்ப்பிருந்தது. அப்போது குரலுக்குரியவளின் பொலிவு நிறைந்த முகமும் அவனுள் நினைவில் தோன்றியது. முகத்தின் அழகைக் குரலும், குரலின் அழகை முகமும் மிகுவிப்பனவாயிருந்தன.

"ஏதேது? இசை, நாடகம், போன்ற கலைகள் வெறும் விருப்பத்தைத்தான் பெருக்கும் என்று தங்கள் பாட்டனார் கூறியது பொய்யாயிராது போலிருக்கிறதே?" என்று குறும்புச் சிரிப்போடு மறுபடி முடிநாகன் குறுக்கிட்டபோது இளையபாண்டியனுக்குக் கோபமே வந்துவிட்டது. ஒரு கணம் ஒன்றும் மறுமொழி கூறாமல் மெளனமாகத் திரும்பி முடிநாகனை உறுத்துப் பார்த்தான் சாரகுமாரன். முடிநாகனின் பேச்சு அவ்வளவில் நின்றுபோயிற்று. அமைதியாக இளையபாண்டியரைப் பின்தொடர்ந்து செல்லவேண்டியதாயிற்று அவன். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இசைக்குரல் மிக அருகே ஒலிப்பதுபோல் தோன்றவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/102&oldid=490026" இலிருந்து மீள்விக்கப்பட்டது