பக்கம்:கபாடபுரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கபாடபுரம்


"இது வெறும் வினாவா? அல்லது கவலையா என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் கேள்வி வினாவாக மட்டும் ஒலிப்பதுபோல எனக்குத் தோன்றாததுதான் காரணம். கலைஞர்கள் எப்படி இருக்கவேண்டுமென்று கலைஞர்களே உணராத ஒன்றை வற்புறுத்துகிறீர்கள் நீங்கள்..."

"அப்படியில்லை. இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். கலையின்மேல் பிரியப்பட்டு மட்டுமே ஒரிடத்தில் தங்கமுடியாது...?"

"எப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்களேன். இடத்தின்மேல் பிரியப்படுத்துவது தவிர மனிதர்கள் மேல் பிரியப்படத்தக்க அத்துணைச் சிறப்பான பண்புள்ள மனிதர்களும் இங்கு நிறைய இருக்கிறார்கள் என்று இன்று காலைவரையில் நான் எண்ணியிருந்தேன். இப்போதோ என்னுடைய அந்த இரண்டாவது எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது."

"நீ மிகவும் சினமாகப் பேசுகிறாய் பெண்ணே பேச்சில் எப்போதுமே நிதானம் வேண்டும். அதுவும் என்னைப் போன்ற முதியவர்களிடம் உரையாடும்போது இன்னும் அதிகமான நிதானம் வேண்டும்."

மறுமொழிகூறாமல் அவரை வெறுப்பவள்போல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டாள் அவள். இந்தக் கேள்விகளை விரும்பாத சிகண்டியாசிரியர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றார். சிறிது தொலைவு விலகி நின்ற அவள் தந்தை, அருகில் வந்து பெரியபாண்டியரிடம் ஏதோ பேசத் தொடங்கினார்.

"தொடர்ந்து ஓரிடத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கு மாறிமாறிச் சென்றுகொண்டிருப்பதனால்தான் கலைஞர்களின் கலை வளர்ச்சியும் மெருகும் அடையும்" என்று மீண்டும் அவளுடைய தந்தையிடம் வாதிடத் தொடங்கினார் பெரியபாண்டியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/176&oldid=490107" இலிருந்து மீள்விக்கப்பட்டது