பக்கம்:கபாடபுரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

173

அவருக்கு இல்லை. கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற மனநிலையோடு இருந்தார் அவர். கண்ணுக்கினியாள் என்ற புள்ளிமானைக் காணப் பெரியபாண்டியர் என்ற சீற்றம் நிறைந்த முதிய சிங்கத்தை அழைத்துப்போவது போன்ற அவ்வளவு வேதனை அந்த இசைப்புலவருடைய உள்ளத்திலே நிறைந்திருந்தது. சிகண்டியாசிரியர் சந்தேகப் பட்டதற்கும் வேதனைப்பட்டதற்கும் ஏற்றாற்போலவே பெரிய பாண்டியரும் அங்கு நடந்துகொண்டார். சிறிதுநேரம் அவளுடைய இசையைக் கேட்பதுபோல நடித்த பெரிய பாண்டியர் அவளிடம் வினாவிய வினாக்களும் விசாரித்த விசாரணைகளும் சிகண்டியாசிரியரைக் கலக்கத்திற்கு உள்ளாக்கின.

"இவ்வளவு நன்றாகப் பாடும் வல்லமை வாய்ந்த நீயும் உன் பெற்றோரும் ஏன் இந்தக் கபாடபுரத்திலேயே தங்கி விட்டீர்கள்? பயன் மரம் நாடிச்செல்லும் பறவைகள்போல் ஊரூராகச் சென்று பாடிக்கொண்டிருப்பதல்லவா சிறந்த பாண்குடியினருக்கு அழகு?" என்று முதல் வினாவிலேயே அவள் மனத்தை ஆழம் பார்த்தார் பெரியபாண்டியர்.

"நகரணி மங்கல விழாவுக்காக இங்க வந்தோம்! அப்படியே தங்கிவிட்டோம். வந்த கலைஞர்களை எல்லாம் காலவரையறையின்றி விருந்தினராக ஏற்று உபசரிக்கும் பண்புள்ள இந்தப் பாண்டிய நாட்டில் முதல் முதலாக நீங்கள் தான் இப்படி எங்களை வினாவுகிறீர்கள் தங்கள் நாட்டிற்கு வந்த கலைஞர்கள் வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுப் போகாமல் ஏன் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார்கள் என்று கவலைப்படும் முதல் மனிதரை நான் இன்று மாலையில் இப்போதுதான் இங்கே சந்திக்கிறேன்!" என்றாள் கண்ணுக்கினியாள்.

"நான் தவறாகக் கூறவில்லை பெண்ணே சிறப்பாக வேறு காரணம் ஏதாவது இருந்தாலன்றிக் கலைஞர்கள். ஓரிடத்திலேயே இப்படித் தங்கமாட்டார்களே என்றுதான் வினாவினேன்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/175&oldid=490106" இலிருந்து மீள்விக்கப்பட்டது