பக்கம்:கபாடபுரம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கபாடபுரம்


பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லாரும் நின்றுகொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டுகொண்டான். அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன்.

அவனுடைய பார்வை போகிற இடங்களையெல்லாம் கவனித்துக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த பாட்டனாரோ, "எங்கே கவனிக்கிறாய் சாரகுமாரா? ஆசிரியருக்குச் செவிகொடுத்து நூலைக் கேள். பராக்குப் பார்க்காதே!” என்றார். இதில் அவருடைய சூழ்ச்சி ஏதோ இருப்பதாகத் தோன்றினாலும் அவரைக் கேட்க முடியாமல் தவித்தான் இளைய பாண்டியன். அரங்கேற்றத்தைப் பற்றியும் அதில் அவள் பாட வேண்டியதைப் பற்றியும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் அவளிடம் தான் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். அவள்ை அரங்கிற்குள்ளயே வரவிடாமல் ஒதுங்கி நிற்கச் செய்துவிட்ட விதியை எண்ணி நோவதைத் தவிர அப்போது அவனால் வேறெதுவுமே செய்ய முடியவில்லை. அரங்கேற்றம் மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"இலட்சனங்கள் பிறக்கிற அவசரம் சில சமயங்களில் இலட்சியங்களையே அழித்துவிடுகிறது" என்பதாக அன்று அவள் கூறியது நினைவு வந்தது அவனுக்கு அரங்கேற்றம் முடிந்தபின்பாவது அவள் நிற்கிற இடத்தைத் தேடி ஒடவேண்டுமென்பது அவன் ஆவலாயிருந்தது. தான் ஒர் அரசகுமாரனாகப் பிறந்ததற்காக அதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அன்று வருத்தப்பட்டான் அவன். ஒருவாறு அரங்கேற்றம் நிறைகிற நிலை வந்தது. சிகண்டியாசிரியர் இலக்கண நூலின் இறுதி நூற்பாவை விளக்கிக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/190&oldid=490121" இலிருந்து மீள்விக்கப்பட்டது