64
கபாடபுரம்
செல்லாமல் நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தேசாந்திரிகளாக யாத்திரை செல்லும் யாத்ரீகர்களைப் போன்ற கோலத்தில் புறப்பட்ட அவர்களிருவரும் கோட்டைக்கு வெளியே புறவீதிக்கு வந்து சுற்றினர். அவர்கள் புறவீதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் புறநகரையும் அகநகரையும் பிரிக்கும் கோட்டைக் கபாடங்களை அடைந்து விட்டனர். இரண்டு கபாடங்களிலுமாகச் சேர்த்து ஈராயிரம் வெண்கல மணிகளுக்கு மேல் உள்ள அந்தக் கபாடங்களை இழுத்தடைக்கும்போது கபாடபுர நகரின் சுற்றுப்புறத்தில் சில கல் தொலைவுவரை கணிர் கணிர் என்று மணிகளின் ஒலி எழுந்து கேட்பது வழக்கம். பல்லாயிரம் மணி நாக்குகள் கலீர் கலீரென்று ஒலித்துச் சிதறும் அந்த ஓசையைச் செவியுற்றுத் 'தலைநகரில் கோட்டைக் கதவை அடைத்து விட்டார்கள்' - என்று அக்கம்பக்கத்துச் சிற்றுார்களில் உள்ளவர்கள் பேசிக் கொள்வதுண்டு.
அன்றும் நகர் பரிசோதனைகாகப் புறநகருக்கு வெளியே வந்துவிட்டபின் இளைய பாண்டியரும், முடிநாகனும், இந்த ஓசையைக் கேட்டே கபாடங்கள் அடைக்கப்படுவதை உணர்ந்தனர். முதல் கபாடத்தை அடைக்கும் மணியோசையைக் கேட்டே வெளியே வந்திருந்தவர்களில் கோட்டைக்குள் காரியமுள்ளவர்கள் விரைந்து உள்ளே போய்விட முடியும். அதற்கு வாய்ப்பாகவே முதல் கபாடத்தை அடைப்பதற்கும் இரண்டாவது கபாடத்தை அடைப்பதற்கும் நடுவே அரை நாழிகைப்போது இடை நேரம் கொடுத்து வழக்கமாக அடைத்தனர்.
முதல் நாள் தேருலாவின் காரணமாகக் கபாடங்கள் அடைக்கப்படவில்லை. நகரின் பெயரையே தங்கள் பெயராகக் கொண்டிருக்கும் அந்தப் புகழ்வாய்ந்த கபாடங்கள் ஆண்டின் நாட்களில் அடைக்கப்பெறாத ஒரே தினம் இந்த நகரணி மங்கல நாள் மட்டும்தான். கபாடங்களின் பல பகுதிகளில் விலையுயர்ந்த முத்துக்களும் உச்சியிலுள்ள குமிழ்களில் விலை மதிப்பு அற்ற பெரிய பெரிய சிவப்பு இரத்தினக்கற்களும் பதிக்கப் பெற்றிருந்தன. அவற்றைத் திருடும் நோக்குடனோ, பெயர்த்து