பக்கம்:கபாடபுரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

65


எடுக்கும் ஆசையுடனோ எவராவது இந்தக் கபாடங்களில் ஏறினால் அப்படி ஏறும்போது உண்டாகிற மணிகளின் ஒசை அருகிலுள்ள காவல் வீரர்களையும் நகரையும் எழுப்பி விட்டுவிடும். மணிகள் கபாடங்களில் பொருத்தப்பட்டதன் அந்தரங்க நோக்கங்களில் இதுவும் ஒன்று.

கோ நகரத்தின் அந்தத் தெய்வீகக் கபாடங்களின் மேல் செந்நெருப்புத் தகதகப்பதுபோல் தெரியும் அந்த இரத்தினங்கள் உலகின் வேறெந்த இரத்தினாகரங்களிலும் கிடைக்காதவையும் சிறப்பு மிக்கவையும் ஆகும். இளைய பாண்டியனும் தேசாந்தரிகளின் கோலத்தோடு புற நகருக்கு வந்து அங்கிருந்த புன்னை மரங்களில் ஒன்றினடியில் போய் அமர்ந்தபோது கபாடங்கள் இரண்டையுமே அடைத்து முடித்திருந்தார்கள். புன்னை மரத்தடியில் அமர்ந்தவர்கள் அதிகநேரம் பேசிக்கொண்டேயிருந்து விட்டதனால் போது கழிந்தது தெரியவேயில்லை. மறுபடி அவர்கள் புன்னை மரத்தடியிலிருந்து எழுந்தபோது மேற்குத் திசையிலிருந்து - பொதிகள் போன்ற சில மூட்டைகளை சுமந்துகொண்டு நான்கு ஐந்து முரட்டு அவுணர்கள் கபாடங்களை நோக்கிச் செல்வதைக்கண்டு மறைந்து நின்று கவனித்தனர். தற்செயலாகத் தென்பட்ட அந்தக் காட்சியை அவர்கள் சிரத்தையோடு கவனித்ததால் அன்றிரவு கபாடத்தில் நிகழ இருந்த களவு ஒன்று தடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அவர்களிருவரும் கவனிக்க நேராமலிருந்திருந்தால் குறைந்த பட்சம் கபாடத்திலிருந்து அன்றிரவு சில முத்துக்களாவது பெயர்த்துக் கொண்டு போகப்பட்டிருக்கும்.

7. அவுணர் வீதி முரச மேடை

கருமசிரத்தையோடு எந்தப் பொருளையோ பொதி பொதியாகச் சுமந்தெடுத்துப் போவதுபோல் அந்த முரட்டு அவுணர்கள் சுமந்து சென்ற பொதிகள் என்னவாயிருக்கும் என்று இளையபாண்டியனால் அநுமானிக்கக்கூட முடியவில்லை. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/67&oldid=489989" இலிருந்து மீள்விக்கப்பட்டது