பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

9


பூந்தோட்டத்தின் வாடை போல அந்தப் புன்சிரிப்பு பரவிற்று. வாலிபன் நாடி அத்தனையிலும் அது புகுந்தது. இந்தக் காதல் காட்சியைக் கடைக்கண்ணால் கண்டாள் வேதவல்லி. பெருமூச்சுவிட்டாள்.

மாரி பிரசாதம் பெற்றாள் சாரதா, இனி நோய் நீங்குமென வீராசாமிபிள்ளை எண்ணினார். சாரதா முன்போல் முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், சற்றுச் சிரித்தமுகமாக இருப்பதைக் கண்டு, வீராசாமிபிள்ளை தம் மனைவி வேதவல்லியை அருகேயழைத்து, “வேதம்! பார்த்தாயா பெண்ணை. பூசாரி போட்ட மந்திரம் வேலை செய்கிறது. முகத்திலே தெளிவு வந்துவிட்டது பார்” என்று கூறினார். வேதவல்லிக்குத் தெரியும், சாரதாவின் களிப்புக்குக் காரணம் பூசாரியுமல்ல, அவன் மந்திரமுமல்ல, ஆனால் புதிதாகத் தோன்றிய பரந்தாமனும் அவன் ஊட்டிய காதலும் பெண்ணின் உள்ளத்திலே ஆனந்தத்தைக் கிளப்பிவிட்டதென்பது.

மறுபடி அவர்கள், அதே வண்டியிலேறி இரயிலடிக்கு வந்தனர். வண்டியோட்டியிடம் கூறிவிட்டு, இரயிலேறும் சமயம், வேதவல்லி, பரந்தாமனைப் பார்த்து, “ஏன் தம்பீ. எங்க ஊருக்கு வாயேன் ஒரு தடவை” என்று அழைத்தாள், சாரதா வாயால் அழைக்கவில்லை. கண்ணால் கூப்பிட்டாள். வேதவல்லி வாயால் கூப்பிட்டது, பரந்தாமன் செவியில் விழவில்லை. சாரதாவின் கண்மொழி, அவனுடைய நரம்பு அத்தனையிலும் புகுந்து குடைந்தது. “மாடாவது வண்டியாவது, மாரிக்குப்பமாவது, பேசாமல் சாரதாவைப் பின்தொடர்ந்து போகவேண்டியதுதான் என்று நினைத்தான். “எனைக்கணம் பிரிய மனம் வந்ததோ, நீ எங்குச் சென்றாலும் உன்னை விடுவேனோ, ராதே” என்ற பாட்டை எண்ணினான்.

மணி அடித்து விட்டார்கள்! வீராசாமிப் பிள்ளை களைத்து விட்டார். வேதவல்லி உட்கார்ந்தாகிவிட்டது.