பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கபோதிபுரக்


அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவள் புரட்சிப் பெண்ணல்ல! புத்துலக மங்கையல்ல!

மாரிகோவிலுக்கு மாட்டுவண்டி வந்து சேர்ந்தது. அம்மன் தரிசனமாயிற்று. அந்தப் பூசாரி, ஏதோ மந்திரம் செய்தான். மடித்துக் கொடுத்தான் மாரி பிரசாதத்தை. வாரத்திற்கொருமுறை முழுக்கு, ஒரு வேளை உணவு, ஒரு நாளைக்கு ஒன்பது முறை அரசமரம் சுற்றுவது என்று ஏதேதோ ‘நிபந்தனை’ போட்டான். கோவிலில் விற்ற ‘சோற்றை’த் தின்றார்கள். மிச்சம் கொஞ்சம் இருந்தது. “பாபம்! வண்டிக்காரப் பிள்ளையாண்டானுக்குப் போடலாமே” என்றாள் வேதவல்லி. “ஆமாம், பாபம்” என்றாள் சாரதா.

ஒவ்வோர் உருண்டையாக உருட்டி வண்டியோட்டும் பிள்ளையாண்டான் கையிலே சாரதா கொடுத்தாள். அந்த நேரத்திலே அவள் தந்தை வெகுசுவாரசியமாகப் பூசாரியுடன் பேசிக்கொண்டிருந்ததால், அதுவும் நடக்க முடிந்தது. அவர் மட்டும் அதைப் பார்த்திருந்தால், ஒரு முறைப்பு. ஒரே கனைப்பு. உடனே சாரதா நடுநடுங்கிப் போயிருப்பாள்.

சாரதா, வண்டியோட்டிக்குச் சோறு போட்டதாக அவன் கருதவில்லை. அமிருதம் கொடுத்தாள் என்றே கருதினான். அந்த மங்கையின் கையால் கிடைத்த உணவு, அவனுக்கு அவ்வளவு இன்பமாக இருந்தது. அவளும் அவனுக்கு வெறும் சாதத்தைப் போடவில்லை ஒவ்வொரு பிடியிலும் தனது காதல் ரசத்தைக் கலந்து பிசைந்து தந்தாள். இவரைப் போன்றன்றோ என் புருஷன் இருக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியதால் துணிவும் ஏற்பட்டது அந்தத் தையலுக்கு. எனவே, அவனுக்குச் சாதம் போட்டுக்கொண்டே புன்சிரிப்பாக அவனைப் பார்த்துச் சிரித்தாள்.